சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் பதற்றம் நீடிப்பு : உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றதால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில், இன்று மேலும் பல இளம்பெண்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சபரிமலையில் பதற்றம் நிலவிய வண்ணம் உள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது. கல்வீச்சு, தடியடி என கேரளா போர்க்களமாக மாறி உள்ளது.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.

இந்த மூன்று நாட்களிலும் இளம் பெண்கள் பல்வேறு வழிகளில் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். தொலை காட்சி நிருபர் என்றும், பக்தர் என்றும் சென்ற இளம் பெண்களை பக்தர்கள் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பினர்.

நேற்று தொலைகாட்சி நிருபர் கவிதா, பக்தர் ரஹானாபாத்திமா ஆகிய 2 பெண்களையும் போலீசார் கவச உடை அணிவித்து சன்னிதானம் வரை அழைத்து சென்றனர். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் தந்திரிகளின் போராட்டம் காரணமாக அதன்பின் அவர்களால் செல்ல முடியாமல் அவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று இந்த சம்பவங்களால் சபரிமலை முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

இந்தநிலையில் இன்று மேலும் பல இளம்பெண்கள் சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் போர்வையில் போராட்டக்காரர்கள் வருகிறார்களா என போலீசார உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மேலும் சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை போலீசார் பரிசோதிக்கின்றனர். பக்தர்களையும் தீவிர விசாரணைக்கு பின்னரே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழி முழுவதும் ஆங்காங்கே உளவுத்துறை போலீசார், கமாண்டோ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜ தலைவர் சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்கு இன்று மேலும் பல இளம்பெண்கள் வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் நன்றாக தெரியும் என்று கூறினார்.


தந்திரிக்கு எதிர்ப்பும் ஆதரவும்: சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் கோயிலை மூடிவிடுவேன் என்று நேற்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தந்திரியில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் கூறியதாவது, ‘சபரிமலை கோயிலை மூடிவிடுவேன் என்று தந்திரி கூறியது கடும் கண்டத்திற்கு உரியதாகும் சபரமிலை கோயிலை மூட  பந்தளம் அரண்மனைக்கோ, தந்திரிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. 18ம்அடி அருகே மேல்சாந்தியின் உதவியாளர்கள் பூஜைகளை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தியது சபரிமலை கோயிலுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது’ என்று கூறினார்.

மாளிகை புரம் மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கூறியது: சபரிமலை கோயில் நடையை மூடுவேன் என்று தந்திரி கூறியதில் எந்த தவறும் இல்லை.

சபரிமலை கோயில் ஆச்சாரம் மீறப்பட்டால் கோயிலை மூடுவதற்கு தந்திரிக்கு முழு உரிமை உண்டு. 18ம் படிக்கு அருகே எங்கள் உதவியாளர்கள் ேபாராட்டம் நடத்தியதில் எந்த தவறும் இலலை.

மோசமான சூழ்நிலை ஏற்படும் போது வேறு வழியில்லாமல் தான் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த போராட்டத்தில் சபரிமலை கோயிலுக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை.

இதனிடையே சபரிமலையில் போராட்டம் நடத்திய பக்தர்களுக்கு தேவஸம் போர்டு சார்பில் விளக்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ேவலையை வீட்டு நீக்க மிரட்டல்
சபரிமலைக்கு செல்ல முயன்ற மாடலிங் அழகி ரெஹானா பாத்திமா கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பிஎஸ்என்எல் குடியிருப்பில் தான் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

இந்தநிலையில் அவர் சபரிமலைக்கு சென்ற விவகாரம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற கூறி பிஎஸ்என்எல் பேஸ்புக் பக்கத்தில் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரஹ்னா சபரிமலை செய்ய முயற்சித்து மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்என்எல் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிஎஸ்என்எல் விடுத்துள்ள அறிக்கையில், அலுவலகத்திற்கு வெளியே தங்களது ஊழியரின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இருமுடி கட்டில் ஆரஞ்சு, கொய்யா பழங்கள்

சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி ரஹ்னாபாத்திமா பம்பையில் நேற்று கூறுகையில், நான் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சபரிமலை வந்தாகவும், முடியாததால் தான் கொண்டுவந்த இருமுடிகட்டை அங்கே (சபரிமலையில்) விட்டு செல்வதாகவும் கூறினார்.

ஏற்கனவே அவரது இருமுடி கட்டில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் போன்ற பொருட்கள் இருப்பதாகவும் அதை பரிசோதிக்க வேண்டும். அவருக்கு இருமுடி கட்டி நிரம்பி கொடுத்த குருசாமி யார் என்று தெரிவிக்க வேண்டும் என்றும் பாஜவினர் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் பம்பையில் ரஹ்னா விட்டு சென்ற இருமுடி கட்டை போலீசார் பரிசோதித்தனர். அதில் நெய் தேங்காய், அரிசி போன்ற பூஜை பொருட்களுக்கு பதிலாக ஆரஞ்ச் மற்றும் கொய்யா பழங்கள் இருந்தன.

இதுபக்தர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

12பேர் மீது வழக்குப்பதிவு
சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக மத ஒற்றுமையை சீரழிக்கும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துகள் பகிரப்படுவதாக திருவனந்தபுரம் கமிஷனர் பிரகாஷ்சுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மியூசியம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீஸ் விசாரணையில், போலீஸ் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரவி வருவது தெரியவந்தது.

இதுதொடர்பாக 12 பேர் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் பயன்படுத்திய செல்போன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

.

மூலக்கதை