விளைவுகள் மோசமாக இருக்கும் பத்திரிகையாளர் கசோகி கதி என்ன? : சவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
விளைவுகள் மோசமாக இருக்கும் பத்திரிகையாளர் கசோகி கதி என்ன? : சவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் : பத்திரிகையாளர் கசோகி நிச்சயமாக இறந்ததாகவே தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்றவரும், அந்நாட்டின் பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணிபுரிந்து வந்தவருமான பத்திரிகையாளர் ஜமால் கசோகி, கடந்த 2ம் தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றவர், மாயமானார். அவர் சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தனது அரசிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சவுதி அரேபியா மற்றும் துருக்கியில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நாடு திரும்பியுள்ள அவர், அதிபர் டிரம்பை நேரிடையாக சந்தித்து தனது விசாரணை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது :பத்திரிகையாளர் ஜமால் கசோகி நிச்சயமாக இறந்ததாகவே தெரிகிறது. இது மிகவும் சோகமான விஷயம். இதன் பின்னணியில் சவுதி இருப்பது நிச்சயமானால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். மிகவும் மோசமாக இருக்கும். ஆனால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சில விசாரணைகளுக்காக காத்திருக்கிறோம். அதன் தீர்வுகள் விரைவில் வரும். அதை தொடர்ந்து மிகவும் கடுமையான அறிக்கையை வெளியிடுவோம். ஆனால் அந்த மூன்று விதமான விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இணைந்து சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பதை தடுக்க தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளனர்.

மூலக்கதை