பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி

PARIS TAMIL  PARIS TAMIL
பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதி 60 பேர் பலி

நாட்டின் பல மாநிலங்களில் நேற்று தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தசரா கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, தீமையை நன்மை வெற்றி கொள்வதை குறிக்கும்வகையில், ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்படுவது வழக்கம்.

நேற்று பஞ்சாப் மாநிலத்திலும் தசரா கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால், தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரெயில் வந்து கொண்டிருந்தது.

தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆர்வ மிகுதியால் அங்கேயே இருந்தனர். மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ரெயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அடுத்த நொடியில், அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில், 60 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து, சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். விபத்து காரணமாக, அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்தை பார்வையிட சென்ற மாநில கல்வி மந்திரி ஓ.பி.சோனியை பொதுமக்கள் தாக்கினர்

இந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்தார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நிவாரண பணிகளை நேரில் பார்வையிட சம்பவ இடத்துக்கு தான் செல்வதாகவும் அமரீந்தர் சிங் தெரிவித்தார். அதுபோல், மாநிலத்தின் உள்துறை செயலாளர், சுகாதார செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோரையும் சம்பவ இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

மாநில உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, நிலைமையை கேட்டறிந்தார். பஞ்சாப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதற்கிடையே, இந்த ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் உதவி வருவதை கேள்விப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், தேவையான உதவிகளை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில், மாநில அரசும், காங்கிரஸ் ஊழியர்களும் உடனடி நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ரெயில் விபத்து பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். தண்டவாளம் அருகே உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து இந்த விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

பஞ்சாப் முழுவதும் இன்று (சனிக்கிழமை) கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பட்டாசு வெடித்தபோது, ஏராளமானோர் தண்டவாளத்துக்கு ஓடியதால் நெரிசல் ஏற்பட்டதாகவும், அவர்கள் மீது ரெயில் மோதி விபத்து நடந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை