வடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
வடகிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

சாதகமான சூழல் நிலவுவதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சனிக்கிழமை அல்லது நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பெய்து வருகிறது.

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைய இருப்பதாகவும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்(இன்று) ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

தென்மேற்கு பருவமழை 20-ந்தேதியுடன்(இன்றுடன்) நிறைவடைய இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக 20-ந்தேதியோ(இன்று) அல்லது 21-ந்தேதியோ(நாளை) வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

அதேபோல் தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது வருகிற 22-ந்தேதி(திங்கட்கிழமை) வடக்கு அந்தமான் நோக்கி நகர்ந்து, அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுகிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

ராஜபாளையத்தில் 12 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 செ.மீ., கோவில்பட்டியில் 5 செ.மீ., வத்திராயிருப்பு, சிவகிரியில் தலா 4 செ.மீ., கூடலூர், பேரையூர், மணியாச்சி, சிவகாசி, ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில் தலா 3 செ.மீ., ஆய்க்குடி, மேட்டுப்பாளையம், விருதுநகர், பாளையங்கோட்டை, கெட்டி, ஈரோட்டில் தலா 2 செ.மீ.

மூலக்கதை