அய்யப்பன் கோவிலை மூடுவோம் என்று தந்திரி எச்சரிக்கை சபரிமலையில் பதற்றம் நீடிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
அய்யப்பன் கோவிலை மூடுவோம் என்று தந்திரி எச்சரிக்கை சபரிமலையில் பதற்றம் நீடிப்பு

சபரிமலை சன்னிதானம் அருகே சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அய்யப்பன் கோவிலை மூடுவோம் என தந்திரி எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

பக்தர்களின் சரண கோஷங்களால் ஜொலிக்கிற சபரிமலை அய்யப்பன் கோவில், இப்போது போராட்ட களமாக மாறி இருக்கிறது. இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு மாறாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு, பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும், பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளது. “பிரம்மச்சாரியான அய்யப்பனை மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் தரிசிக்க ஆகம விதிகளை மீறி எப்படி அனுமதிக்க முடியும்?” என அவர்கள் கேட்டு, பெண்களை அனுமதிக்க மறுத்து தொடர் போராட்டங்களில் குதித்து உள்ளனர்.

தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 25-க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் தாக்கலாகி, அவை நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் ஐப்பசி மாத வழிபாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, கடந்த 17-ந் தேதி திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க முதல் நாளில் வந்த பெண்கள், வழியிலேயே நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதில் போலீசார் தலையிட, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி நடந்தது.

இதைக் கண்டித்து, நேற்று முன்தினம் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு நடந்தது. இப்போது சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது.

இதற்கிடையே நடை திறந்த 2-ம் நாளான நேற்று முன்தினம், உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டின் பெண் பத்திரிகையாளர் சுகாசினிராஜ் செய்தி சேகரிக்க வந்தார்.

அவர் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை விநாயகர் கோவிலை கடந்து சென்றார்.

ஆனால் பக்தர்களின் தொடர் எதிர்ப்பை மீறிச்சென்று, அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி அவர் திரும்பிச் சென்றார்.

இந்த நிலையில், 3-ம் நாளான நேற்று ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் (வயது 24), கொச்சியை சேர்ந்த இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமாவும் (31) சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வந்தனர்.

இவர்களில் கவிதா கோஷி, கலவர தடுப்பு போலீசாரின் கவச உடை, ஹெல்மெட் அணிந்து வந்தார். ரெஹானா பாத்திமா இரு முடி கட்டி வந்தார். இவர்கள் இருவரும் போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் தலைமையில் சுமார் 150 கமாண்டோ போலீஸ் படை வீரர்கள் புடை சூழ, பலத்த பாதுகாப்புடன் சபரிமலை வந்தனர்.

அவர்கள் அய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள வலியநடை பந்தலில் நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்து 18-ம் படி வரையில் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழிவிட மறுத்து போராட்டத்தில் குதித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து பெண்கள் 2 பேருக்கும் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஐ.ஜி. ஸ்ரீஜித் கேட்டுக் கொண்டார். ஆனால் பக்தர்கள் அதை நிராகரித்தனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது.

இன்னொரு புறம், பெண்களை சன்னிதானத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு, மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, மேல் சாந்திகளுக்கு உதவுகிற கீழ்சாந்திகள் என ஏறத்தாழ 35 பேர் பூஜையை நிறுத்தி விட்டு 18-ம் படி அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இப்படி அவர்கள் பூஜையை நிறுத்தி, போராட்டம் நடத்தியது இதுவே வரலாற்றில் முதல்முறை என்று தகவல்கள் கூறுகின்றன.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் பந்தளம் மன்னர் குடும்பத்தினர், “சன்னிதானத்துக்குள் பெண்கள் வந்து விட்டால் கோவில் நடையை சாத்தி விடுங்கள்” என கோவில் தந்திரிக்கு அறிவுரை வழங்கி கடிதம் அனுப்பினார்கள்.

அதைத் தொடர்ந்து அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு போலீசாரிடம், “பெண்கள் சன்னிதானத்துக்குள் நுழைவதை அனுமதித்தால், வன்முறையை தடுக்கிற விதத்தில் கோவில் நடையை மூடி சாவியை ஒப்படைத்து விடுவோம்” என எச்சரித்தார்.

இந்த பதற்றமான சூழலில், ஐ.ஜி. ஸ்ரீஜித், அரசு நிர்வாகத்தை கலந்து ஆலோசித்தார். அப்போது கவிதா மற்றும் ரெஹானாவிடம் பேசி, அவர்களை திரும்பிப் போகுமாறு செய்யுங்கள் என அவருக்கு ஆலோசனை தரப்பட்டது.

அவரும் அந்தப் பெண்களிடம் சமாதானம் பேசினார். அதைத்தொடர்ந்து அந்த 2 பெண்களும் சன்னிதானம் செல்லாமல் பம்பைக்கு திரும்பி விட்டனர்.

மேரி சுவீட்டி (46) என்ற கிறிஸ்தவ பெண்ணும் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பம்பைக்கு வந்தார். அவர் அனைத்து மதங்களையும் தான் மதிப்பதால், அய்யப்பனை தரிசிக்க வந்ததாக கூறினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீசார் கூறியதால் அவர் திரும்பிச்சென்றார்.

இவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், சார்ஜாவில் வேலை பார்த்து வந்தார் என தகவல்கள் கூறுகின்றன.

சபரிமலை பிரச்சினை தொடர்பாக திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலையின் பெயரால் வன்முறைக்கு அரசு இடம் தராது.

புனித பூமியை போராட்ட களம் ஆக்கும் வகையில் பெண் ஆர்வலர்களுக்கு அனுமதி தர முடியாது. பக்தர்களின் நம்பிக்கையில் சமரசம் செய்து கொள்ள முடியாது.

2 பெண்களை சபரிமலை சன்னிதானம் அருகில்வரை போலீசார் அழைத்துச் சென்றது குறித்த தகவல், எனக்கு 90 நிமிடங்கள் கழித்துத்தான் கிடைத்தது.

சபரிமலைக்கு எதிராக பேஸ் புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் எதிர் கருத்துகளை பதிவு செய்த ரெஹானா பாத்திமாவை போலீசார் அடையாளம் கண்டுகொள்ள தவறி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட 4 இடங்களில் 3 நாள் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதற்றம் நீடிப்பதால் 22-ந் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

அத்துடன் பிலாபள்ளி, லாஹா ஆகிய 2 இடங்களிலும் புதிதாக 144 தடை உத்தரவு, 22-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை