அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

PARIS TAMIL  PARIS TAMIL
அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நீடிக்கும் எதிர்ப்பு: கேரள, தமிழக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நீடிக்கும் நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று சபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள், பக்தர்களின் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 தென்மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று சில அமைப்புகள் அச்சுறுத்தல் விடுத்து வருவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி இருக்கின்றன.

இந்த போராட்டங்களால் எவ்வித அசம்பாவிதமும் நேராதவாறு, சம்பந்தப்பட்ட 3 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும்.

அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உரிய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு எந்தவிதத்திலும் சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டும்.

போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த 15-ந் தேதி, கேரள மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், “சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசு விவகாரம் என்பதால், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மாநில அரசின் பொறுப்பு ஆகும்.

பெண் பக்தர்கள் தடுக்கப்படுவது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அவமதிப்பது ஆகிவிடும் என்பதை மாநில அரசு உணரும் என்று கருதுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அதற்கு கேரள மாநில அரசு அளித்த பதிலில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அமல்படுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை