விஜய் ஹசாரே டிராபி: இறுதி போட்டியில் இன்று மும்பை - டெல்லி பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
விஜய் ஹசாரே டிராபி: இறுதி போட்டியில் இன்று மும்பை  டெல்லி பலப்பரீட்சை

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.தேசிய அளவில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான விஜய் ஹசாரே டிராபி தொடர், கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 37 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின.  இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. சி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி 9 போட்டியில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று (5வது இடம்) ஏமாற்றத்துடன் வெளியேறியது.கால் இறுதி ஆட்டங்களில் வெற்றிகளைக் குவித்த மும்பை, டெல்லி, ஜார்க்கண்ட், ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.  முதலாவது அரை இறுதியில் ஐதராபாத்துடன் மோதிய மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு முன்னேறியது. 2வது அரை இறுதியில் ஜார்க்கண்ட் - டெல்லி அணிகள் நேற்று முன்தினம் மோதின. டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீச, ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன் குவித்து ஆல் அவுட்டானது. விராத் சிங் 71, ஆனந்த் சிங் 36, நதீம் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். டெல்லி பந்துவீச்சில் நவ்தீப் சாய்னி 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 30 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. எனினும், கடுமையாகப் போராடிய அந்த அணி 49.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியது.நிதிஷ் ராணா 39, கேப்டன் கவுதம் கம்பீர் 27, உன்முக்த் 17, ஷோரி, விஜய்ரன் தலா 15 ரன் எடுத்தனர். பவான் நேகி 39 ரன், சாய்னி 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் இன்று களமிறங்குகின்றன. வெஸ்ட் இண்டீசுடன் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதால் ரோகித் ஷர்மா இடம் பெறாவிட்டாலும், மும்பை அணி மிக வலுவாகவே அமைந்துள்ளது. அஜிங்க்யா ரகானே, பிரித்வி ஷா, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்கள். அதே சமயம், கம்பீர் தலைமையிலான டெல்லி அணியும் கோப்பை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இன்றைய போட்டியில் அனல் பறப்பது உறுதி.

மூலக்கதை