சபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
சபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை

ரபேல் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என கடந்தவாரம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட அனைத்து விஷயங்களும் அப்படியே அமைதியாகிவிட்டது. இன்று நாடுமுழுக்க பரபரப்பாக பேசப்படும் இரண்டு விஷயங்கள் ஒன்று மீ டூ மற்றொன்று சபரிமலை.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க குறிப்பிட்ட வயது நிர்ணியக்கப்பட்டு, அது ஆண்டு ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என அனுமதியளித்தது. இதனால் பிரச்னை உருவானது.

தற்போது சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்ணியவாதிகள் என்று சொல்லி வரும் சில பெண்கள், தங்களை பிரபலப்படுத்தி கொள்ள சபரிமலையில் நுழைய முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெண்களை அனுமதித்தால் கோவிலை பூட்டிவிடுவோம் என கோவில் தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், சபரிமலை விவகாரம் குறித்து பேசும்போது, கடவுள் நம்பிக்கை உள்ள நான் கோவிலுக்கு செல்வதில்லை. எல்லா கடவுள்களின் படங்களும் என் வீட்டில் உள்ளது.

சபரிமலை கோயிலுக்கு சென்று தான் ஐயப்பனை வணங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருந்தும் பெண்கள், ஐயப்பனை வணங்கலாம். அதையும் மீறி அவர்கள் கோயிலுக்கு சென்று தான் வழிபடுவேன் என செல்ல முற்பட்டால் ஏதேனும் விடுமுறை நாட்களில் போய் பார்த்துவிட்டு வரலாம். அதைவிடுத்து நான் கூட்டத்தோடு தான் போவேன் என்று கூறினால், பாதுகாப்பின்மை காரணமாக பல்வேறு விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் இவ்வளவு பிடிவாதம் ஏன்? என்றார்.

மூலக்கதை