எச் 1 பி விசா வரையறையில் மாற்றம் செய்யும் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
எச் 1 பி விசா வரையறையில் மாற்றம் செய்யும் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு

வாஷிங்டன்: எச் 1 பி விசா பெறுவதற்கான வரையறைகளை மாற்றியமைக்க கூடாது என அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதற்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் இந்திய ஐ.டி. நிறுவன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று இந்தியா கூறியுள்ளது. எச் 1 பி விசா பெறுவதற்கான புதிய வரையறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அந்நாட்டு குடியமர்வுத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புதுறை திட்டமிட்டுள்ளன. இதன்படி திறமையானவர்கள் மற்றும் மிக திறமையானவர்கள் மட்டுமே எச் 1 பி விசா பெற முடியும். அத்துடன் அமெரிக்கர்களின் பணி மற்றும் ஊதிய விகிதம், பாதுகாக்கப்படும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகும். ஆனால் இது அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் சிறு, மற்றும் குறு ஐ.டி. நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் நகர்வுகளை இந்தியா நெருக்கமாக கவனித்து வருவதாக கூறியுள்ளார். எச் 1 பி விசா வரையறைக்கான மசோதாக்களை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை