பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா?

PARIS TAMIL  PARIS TAMIL
பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா?

சபரிமலை அய்யப் பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்பதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறியுள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு, கோவிலுக்கு வரும் பெண்களுக்கு போதிய வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் கூறி உள்ளது. இந்த போர்டுதான் கோவிலை நிர்வகித்து வருகிறது.


ஆனால், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கேரளாவில் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள்.

பந்தளம் அரச குடும்பத்தினரும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது கோவில் நடைமுறைக்கு எதிரானது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் கேரள அரசின் முடிவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும், பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யக்கோரியும் பாரதீய ஜனதா சார்பில் மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் கேரளாவில், சபரிமலை ஆசார பாதுகாப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

கடந்த 10-ந்தேதி பந்தளத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் காயங்குளம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக சென்று நேற்று தலைநகர் திருவனந்தபுரத்தை சென்றடைந்தது. இதில் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி., பாரதீய தர்மசேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அய்யப்ப பக்தர்களும் கலந்துகொண்டனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச்செயலகத்தின் முன்பு நடைபெற்ற ஊர்வலத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், சபரிமலை கோவில் தொடர்பாக ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுதான் காரணம் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அரசு மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

பாரதீய ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு சபரிமலை அய்யப்பன் கோவில் சம்பிரதாயத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்துவோம் என்றும் கூறினார். அத்துடன், சபரிமலை கோவில் பிரச்சினைக்கு 24 மணி நேரத்தில் கேரள அரசு தீர்வு காணாவிட்டால், மிகப்பெரிய அளவிலான போராட்டத்துக்கு திட்டம் வகுக்கப்படும் என்றும் ‘கெடு’ விதித்தார்.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசப்போவதாகவும் அப்போது அவர் கூறினார்.

இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி இருப்பதால், இந்த சமயத்தில் பெண்கள் கோவிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் பந்தளத்தில் நாளை சில அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளன. இதனால் அங்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி நவம்பர் 17-ந்தேதி முதல் 3 மாத காலம் கோவில் திறக்கப்பட்டு இருக்கும். அப்போது கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு வருவார்கள். இந்த சமயத்திலும் பெண்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருவதால், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டிய கட்டாய நிலை கேரள அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இதில் கலந்துகொள்ளுமாறு அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

சபரிமலை கோவில் விவகாரத்தை அரசியல் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை என்றும், அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான போர்டின் தலைவர் பத்மகுமார் கூறி உள்ளார்.

சபரிமலை கோவிலின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை மாற்ற விரும்பவில்லை என்றும், அவற்றை பாதுகாக்கவே விரும்புவதாகவும், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

எனவே சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா? என்பது இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும்.

மூலக்கதை