அரசு பொது நில ஆவணங்கள்...தூசு தட்டப்படுமா? எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம்

தினமலர்  தினமலர்
அரசு பொது நில ஆவணங்கள்...தூசு தட்டப்படுமா? எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம்

திருப்பூர்:ஆக்கிரமிப்பில் உள்ள பல்வேறு அரசுத்துறை நிலங்களை, மீட்டெடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர முடியும்.ஆங்கிலேயர் காலத்தில், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளுக்கு, தேவையான அளவு நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
அவற்றை கணக்கிடும் போது, ஒவ்வொரு பகுதிகளின் பரப்பு அடிப்படையில், 40 சதவீதம் அளவுக்கு, அரசுக்கு சொந்தமான இடங்கள் ஒதுக்கப்பட்டன.இந்நிலங்கள், அரசு அலுவலகங்கள், நீர் வழித்தடங்கள், வண்டிப்பாதை, பொது இடம், கால்நடை மேய்ச்சல் நிலம், நத்தம் புறம்போக்கு, மயானத்துக்குரிய இடம் என, வகை பிரிக்கப்பட்டு, அதற்கான ஆவணம் தயாரிக்கப்பட்டது.புதியதாக வீட்டுமனை அமைக்கும் போது, இந்த பொது ஒதுக்கீட்டுக்கான இடத்தை பொறுத்தே, அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.அரசு துறைகளுக்கு சொந்தமான நிலம் இருந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய முடியும். அரசு அலுவலகம், குடிநீர் தொட்டி, புதிய பள்ளி, மருத்துவமனை, நுாலகம், பூங்கா, ரோடுகள், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர முடியும்.
மக்களுக்கு பயன்படும் வகையில் புதியதாக அரசு துறைகளுக்கு நிலம் வேண்டும் என்றாலும், அபரிமிதமாக உயர்ந்துள்ள நில மதிப்பு காரணமாக, அரசால் விலை கொடுத்து, நிலம் வாங்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும், தங்கள் துறைகளுக்கு சொந்தமான இடங்கள், எங்கெங்கு உள்ளன என்பது குறித்து கண்டறிய வேண்டும்.
பழைய நில ஆவண அடிப்படையில், அரசு துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, அவற்றின் மதிப்பு குறித்து பட்டியல் தயாரித்து, அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதே, 'தினமலர்' எதிர்பார்ப்பாக உள்ளது.

மூலக்கதை