பைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு:நேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு

தினமலர்  தினமலர்
பைபாஸ் ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு:நேருநகர் சந்திப்பில் சர்வீஸ் ரோடு

மதுரை:மதுரை பைபாஸ் ரோடு நேருநகர் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நெடுஞ்சாலைத்துறை வேலி அமைத்துள்ள கருப்பசுவாமி கோயிலிருந்த இடத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கருப்பசுவாமி கோயில் இருந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவின்படி கடந்தாண்டு ஜூலையில் கோயில் அகற்றப்பட்டது. அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. இருப்பினும் பைபாஸ் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி வேலியில் சுவாமி படங்களை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். நேருநகர், மாடக்குளத்தில் இருந்து பைபாஸ் ரோடு, ரயில்வே மேம்பாலம் செல்லும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க நேருநகர் சந்திப்பில் வேலியை அகற்றி விட்டு சர்வீஸ் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. நேருநகர் ரயில்வே மேம்பாலம் ஒரு வழிச்சாலையாக மாற்றப்படும். நடராஜ்நகரில் இருந்து காளவாசல் நோக்கி செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழே ரயில்வே வழித்தடம் வழியாக சர்வீஸ் ரோட்டில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்படவுள்ளது.

மூலக்கதை