துண்டிப்பு!

தினமலர்  தினமலர்
துண்டிப்பு!

15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து...பரவளூர் மணிமுக்தாற்றில் மேம்பாலம் கட்டப்படுமா?--விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே பரவளூர் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக துண்டிக்கப்பட்ட தற்காலிக சாலை ஓராண்டுக்கு மேலாக சீரமைக்கப்படாததால், 15க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.விருத்தாசலம் அடுத்த பரவளூர் மணிமுக்தாற்றின் வழியாக, ஆற்றின் மறுகரையில் உள்ள கலரங்குப்பம், தொட்டிக்குப்பம், ராசாபாளையம், ரெட்டிக்குப்பம், சின்னவடவாடி, எருமனுார், மு.பரூர் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதி பெற்று வந்தனர்.மேலும், இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்கள் மாட்டுவண்டிகள், டாடா ஏஸ் வேன், டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.அதேபோன்று, விருத்தாசலம், வேப்பூர், பெரம்பலுார் மார்க்கமாக செல்லும் கிராம மக்கள் ஆற்றை கடந்து, பரவளூர் பஸ் நிறுத்தம் மூலம் பஸ் வசதி பெற்று வந்தனர். இதற்காக, மணல் மூலம் தற்காலிகமாக சாலை போடப்பட்ட நிலையில், விளைபொருட்களுடன் செல்லும் வாகனங்கள் சிக்கியதால், விவசாயிகள் சிரமமடைந்தனர். அதைத் தொடர்ந்து, வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கிராவல் கொட்டி, தற்காலிகமாக சாலை போட்டு தரப்பட்டது. இதனால் கரும்பு லோடு ஏற்றிய லாரிகள் எளிதில் சென்று வந்தன.இந்நிலையில், கடந்தாண்டு பெய்த கனமழைக்கு மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அந்த சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மணிமுக்தாற்றின் மறுகரையில் உள்ள கிராம மக்கள், 10 முதல் 15 கி.மீ., துாரம் வரை சுற்றிக் கொண்டு, விருத்தாசலம் வந்து, அங்கிருந்து வேப்பூர், பெரம்பலுார், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேர விரயம் ஏற்படுவதுடன் கூடுதல் பொருட்செலவு ஏற்படுவதால் கிராம மக்கள், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகியும், தற்காலிக பாதை சீரமைக்கப்படாததாலும்; கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாலும், பல கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு செல்வது தவிர்க்க முடியவில்லை. எனவே, பரவளூர் வழியாக செல்லும் மணிமுக்தாற்றில் மேம்பாலம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரூ.5 கோடியில் தடுப்பணைகடந்தாண்டு, பரவளூர் மணிமுக்தாற்றில் மணல் குவாரி செயல்பட்டபோது, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக கிராம மக்கள், மணிமுக்தாறு பாதுகாப்புக்குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.ஆற்றில் நீர்மட்டம் குறையாமல் இருக்க தடுப்பணை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில், தடுப்பணை கட்டித்தரக் கோரி, மணிமுக்தாறு பாதுகாப்புக்குழு சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறையின் ஒப்புதலுடன் பரவளூர் மணிமுக்தாற்றில் 5 கோடி ரூபாயில் தடுப்பணை கட்ட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக, பரவளூரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக சாலையின் வலதுபகுதியில் தடுப்பணை கட்டும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, இம்மாத இறுதியில் டெண்டர் விடப்பட உள்ளது. இதேபோன்று, மேம்பாலம் கட்டித் தந்தால், கிராம விவசாயிகள் பெரிதும் பயனடைவர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை