அதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது

தினகரன்  தினகரன்
அதிபர் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவின் தலையீடும் இருந்தது

வாஷிங்டன்: கடந்த 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் சேர்த்து சீனாவின் தலையீடும் இருந்ததாக அதிபர் டொனால்ட்  டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக அந்நாட்டு எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி  வருகின்றனர். சர்வதேச அளவில் இந்த குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. அதிபர் டிரம்ப் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.  இருந்தபோதிலும் எப்பிஐயின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரணை  மேற்கொண்டுள்ளார். இவரது விசாரணையில் இதுவரை 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதிபர் டிரம்பின் பிரசார தலைவர், பிரசார உதவியாளர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவை போலவே சீனாவும் 2016 அதிபர் தேர்தலில் தலையிட்டிருந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.  விரைவில் அமெரிக்காவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலிலும் சீனா தலையிட முயற்சித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பிரபல  தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது :அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது. ஆனால், சீனாவின் தலையீடும் இருந்ததாக நான் கருதுகிறேன். நான் இதை  வெளிப்படையாக கூறுகிறேன், சீனா மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இதைக்கொண்டு, நான் பிரச்னையை திசைதிருப்ப முயற்சிக்கவில்லை.  நான் ரஷ்யாவை மட்டுமின்றி, சீனாவையும் சேர்த்து கூறுகிறேன்.ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையை நிறுத்தவேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால் அது நியாயமற்ற விசாரணை என்று நான்  கருதுகிறேன். ஏனென்றால், அதில் எந்த சதிவேலையும் நடைபெறவில்லை. தேர்தலில் எனக்கு உதவி செய்யுமாறு நான் ரஷ்யாவை  கேட்டிருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இது மிகவும் கேலிக்குரிய விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை