சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு : திருவனந்தபுரத்தில் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

தினகரன்  தினகரன்
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு : திருவனந்தபுரத்தில் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் வழிபட செல்லாம் என அனுமதியளித்து அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இல்லத்தை முற்றுகையிட்டு பாஜக இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் இருந்து இளைஞரணியினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். வீட்டிற்குள் செல்ல முடியாதவாறு இரும்பு கம்பிகளை கொண்டு போலீசார் தடைகளை அமைத்திருந்த நிலையில், தடுப்புகளையும் மீறி போராட்டக்காரர்கள் வீட்டை முற்றுகையிட சென்றனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றும், தோல்வியில் முடிந்ததால் தண்ணீர் பீச்சியடித்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். எனினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அமைச்சர் வீடு அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மூலக்கதை