ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கடந்த மாதம் 28ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.   முதலில் அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்த நீதிமன்றம் பின்னர் மேலும் 5 நாள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டது.



இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்காக மும்பை முகுல்லா சிறைக்கு அழைத்து சென்ற சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கில் தொடர்புடைய இந்திராணி முகர்ஜியின் முன்னிலையில் நேருக்கு நேர் அமரவைத்து  விசாரணை நடத்தி வீடியோவுடன் கூடிய வாக்குமூலத்தை பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சிதம்பரத்துக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ஆனால் கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், அமலாக்கத்துறை, திடீரென்று டெல்லி, ஊட்டி, கொடைக்கானலில் உள்ள ப. சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான இடங்களை அமலாக்கத்துறை முடக்கி அறிவித்துள்ளது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை