ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்தை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது: பிரான்ஸ் பத்திரிகை பரபரப்பு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்தை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது: பிரான்ஸ் பத்திரிகை பரபரப்பு தகவல்

புதுடெல்லி: ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்சில் வெளியாகும் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் விவகாரத்தில் இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய விமானப் படைக்கு பிரான்சிடம் இருந்து 32 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ. 59,000 கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

இதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2012ம் ஆண்டு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ. 560 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அதனை மாற்றியமைத்து தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதே ரக விமானத்தை ரூ. 1,600 கோடிக்கு வாங்குவதற்கு பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதியதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதை விசாரித்த நீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் வரும் 29ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நேற்று உத்தரவிட்டது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. எவ்வித முன் அனுபமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

 
ரபேல் விமானங்கள் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு  வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனம் இந்த ஒப்பந்தம் குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என கூறியுள்ளது.

இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த பரபரப்பான சூழலில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

ரபேல் ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.

ரபேல் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நிர்மலா சீத்தாராமனின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

.

மூலக்கதை