திருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி

திருமலை: திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 2ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

முதல்நாளான நேற்றிரவு 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி  தேவி, பூதேவி தாயாருடன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்தார்.



பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி  கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வீதிஉலாவின்போது மாடவீதியில் இருப்புறமும் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி வேடமணிந்தும், கோலாட்டம் ஆடியபடியும், பஜனை பாடல்கள் பாடியும் வந்தனர்.

இன்று இரவு அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

தபால் கவர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், இந்திய தபால் துறை சார்பில் நேற்று  தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளிய தபால் கவரை வெளியிட்டது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு வாகன சேவையின்போதும் அந்த வாகன சேவைக்கான தபால் கவர்கள் வெளியிடப்படவுள்ளது.

.

மூலக்கதை