தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற வழக்குகளை 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தினகரன்  தினகரன்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற வழக்குகளை 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் குற்ற விவரங்களை, பிரபல பத்திரிகைகள் மற்றும் டிவி.க்களில் குறைந்தது 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும் எனவும், தவறினால் அந்த வேட்பாளரின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு இருந்தால், அவற்றின் விவரத்தை பிரபல பத்திரிக்கைகள் மற்றும் டி.வி.க்களில் தொடர்ச்சியாக விளம்பரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அப்போதுதான் வாக்காளர்கள் தங்களின் வேட்பாளர்களை பற்றி தெரிந்து முடிவு எடுக்க முடியும் என கூறியிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரத்தை பிரபல பத்திரிக்கைகள் மற்றும் டி.வி.க்களில் குறைந்தது 3 முறை தேர்தல் நேரத்தில் விளம்பரம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெப்சைட்டிலும், மீடியாக்களிலும் வெளியிட வேண்டும். குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள், தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என குறிப்பிட வேண்டும். குற்றங்களில் பெற்ற தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் போன்ற விவரங்களை வேட்பாளர்கள் தங்கள் கட்சியிடம் தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு மூலம் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், தங்கள் குற்ற விவரங்களை ஊடகங்களில் கண்டிப்பாக விளம்பரம் செய்ய வேண்டும். இந்த விளம்பரத்துக்கான செலவு பற்றி தேர்தல் ஆணையம் எதுவும் தெரிவிக்கவில்லை. தேர்தல் தொடர்பான செலவு என்பதால், வேட்பாளர்களே இந்த செலவை ஏற்க வேண்டும் அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

மூலக்கதை