கே.சி.பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்:அமைச்சர் சி.வி.சண்முகம் மனு

தினகரன்  தினகரன்
கே.சி.பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்:அமைச்சர் சி.வி.சண்முகம் மனு

புதுடெல்லி:   அதிமுகவின் புதிய சட்ட விதிகளின் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.பதவி நீக்கப்பட்ட அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் கேசி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், \'அதிமுக பொதுச்செயலாளர் என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சசிகலா அப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை, அதேபோன்று அதிமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய புதிய பதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இது கட்சி சட்டவிதிகளின் படி செல்லாது.’’ என வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், \'அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சசிகலா, மனுதாரர் கேசி.பழனிசாமி ஆகியோர்  3 வாரத்தில்  தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை  பரிசீலனை செய்து அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்\' என கடந்த செப்டம்பர் 13ம் தேதி உத்தரவிட்டிருந்தது.தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், \'கேசி.பழனிமியை பொறுத்தமட்டில் அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட கிடையாது. அப்படி இருக்கையில் அதிமுக சட்டவிதிகள் குறித்து பேச அவருக்கு அதிகாரம் கிடையாது. அவர் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்\' என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை