சபரிமலை விவகாரத்தில் பெண்கள் எழுச்சி பாதை மாற்றிய கட்சிகள்: எச்சரிக்கையுடன் செயல்பட்டது பாஜ.

தினகரன்  தினகரன்
சபரிமலை விவகாரத்தில் பெண்கள் எழுச்சி பாதை மாற்றிய கட்சிகள்: எச்சரிக்கையுடன் செயல்பட்டது பாஜ.

புதுடெல்லி: சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக திரும்பும் என்று பாஜ எதிர்பார்க்கவில்லை. இதனால், மக்களின் எதிர்ப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதில் ஆரம்பம் முதலே பாஜ.வும், அது சார்ந்த அமைப்புகளும் மிக தெளிவாக இருந்து வந்தன. கடந்த 2016ம் ஆண்டு கூட ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக இருந்த சுரேஷ் பையாஜி ஜோஷி, குறிப்பிட்ட வயது பெண்கள் சபரிமலைக்கு வருவதற்கு தடை விதிப்பது முறையற்றது என்று கருத்து கூறியிருந்தார். ‘அனைத்து கோயில்களிலும் பெண்களை அனுமதிக்கும்போது சபரிமலையில் மட்டும் பெண்களை அனுமதிக்க மறுப்பது ஏன்? இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். கடந்த மாதம் 28ம் தேதி சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த தீர்ப்பு வெளியானபோது பாஜ.வை போல எந்த கட்சியும் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை. ஏனென்றால், மக்கள் இதை எப்படி ஏற்பார்கள் என அவர்களால் கணிக்க முடியவில்லை. இறுதியில் பெண் சமத்துவம், நம்பிக்கையின் புனிதம் என கூறி நடுநிலை கருத்தை தெரிவித்தது. இந்த தீர்ப்பு எந்த வகையிலும் மத நம்பிக்கையையும், கோயில் சம்பிரதாயங்களையும் பாதிக்கவில்லை என்று பாஜ.வின் பத்திரிகையான ‘ஜென்மபூமி’யில் கருத்து தெரிவிக்கப்பட்டது. சபரிமலை தீர்ப்பு வந்ததும் பாஜ இதை பெரிதாக கொண்டாடவில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட, பெண்கள் வீதிக்கு வந்து தீர்ப்புக்கு எதிராக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தீர்ப்புக்கு எதிரான மக்கள் எழுச்சியால் உடனடியாக தனது நிலைபாட்டை பாஜ மாற்றிக் கொண்டது. அரசும், தேவசம் போர்டும் இந்த தீர்ப்பை எதிர்த்து  சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என விரும்புவதாக பாஜ பொதுச் செயலாளர்  ரமேஷ் தெரிவித்திருந்தார். அதேபோல், இப்போது நடந்துள்ளது. இப்போது, பாஜ வழியில் மற்ற கட்சிகளும் தங்களுடைய முந்தையை நிலையை மாற்றிக் கொண்டுள்ளன.

மூலக்கதை