ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

தினகரன்  தினகரன்
ஏர்செல்மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

டெல்லி : டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் உதகமண்டலம், கொடைக்கானல், லண்டன் உள்பட வெளிநாடுகளில் இருந்த வீடுகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. முடக்கப்ட்டுள்ள ப.சிதம்பரம், கார்த்தி சொத்து மதிப்பு ரூ.54 கோடி ஆகும். வங்கியில் இருந்த நிரந்தர இருப்பு ரூ .90 லட்சத்தையும் முடக்கியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என்றும், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கண்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது சிபிஐ. நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. இவ்வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், முன்ஜாமீன் கோரி, சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும், மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது அக்டோபர் 8-ம் தேதி வரை இருவரையும் கைது செய்ய தடை நீடிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த வழக்கை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம். அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீடிப்பதாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அனைத்து சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மூலக்கதை