ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ரூ. 39,000 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இன்று இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.   ரஷ்யாவிடம் இருந்து இந்தியா போர் கருவிகளை வாங்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்க்கிறது.

திட்டமிட்டபடி, ஏவுகணைகளை வாங்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நட்பு நாடுகள் ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்றும், எனவே இந்த ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும் எனவும், மீறினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

போர் கருவிகள் வாங்குவது தொடர்பாக, அமெரிக்காவில் சமீபத்தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.   ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என சட்டத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை அதிபர் டிரம்ப் மட்டுமே நீக்கும் அதிகாரம் படைத்தவராக உள்ளார்.



எனவே, தடையை விலக்க டிரம்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டைதான் கடந்த காலங்களில் எடுத்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு நீண்டகாலமாக ரஷ்யா நட்பு நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. புதின் வருகை: ரஷ்ய அதிபர் புதின் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன், புதின் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், ஏவுகணை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.


.

மூலக்கதை