இந்தோனேசியாவில் நிலநடுக்கம் எதிரொலி: சடலங்களை மீட்பதா கைதிகளை தேடுவதா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் எதிரொலி: சடலங்களை மீட்பதா கைதிகளை தேடுவதா?

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், 3 சிறைகளில் இருந்து 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டதால், போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர்.

இந்தோனேசியா நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7. 5 புள்ளியாக பதிவானது. நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் பயங்கர சுனாமியும் தாக்கியதால், டோங்கலா மற்றும் பலு போன்ற கடலோர நகரங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாயின.

இந்த நில நடுக்கம், சுனாமியால், 1,200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வரும்நிலையில், இதுவரை 790 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

இறந்தவர்களின் உடல்கள் பல்வேறு இடங்களில் ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நில நடுக்கத்தின்போது சிறை கட்டிடங்கள் இடிந்து விழுந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 சிறைகளில் இருந்து 1,200 கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் போது பலு நகரில் உள்ள 2 பெரிய சிறைகளின் சுற்றுப் புறச் சுவர்கள் இடிந்து விழுந்த போது, அங்கிருந்த 690 கைதிகளில் 581 பேர் தப்பியோடி விட்டனர். இவர்களை பாதுகாப்புக்கு சிறைக் காவலர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதேபோல், மற்றொரு சிறையில் இருந்து 276 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். டோங்கலா நகர சிறைக்கு தீ வைத்துவிட்டு, அங்கிருந்த 343 கைதிகள் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து இந்தோனேசிய நீதித்துறை அமைச்சக அதிகாரி புகுக் உடாமி கூறுகையில், ‘நில நடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் பலு நகர சிறைகளில் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், சிறிது நேரத்தில் பூமிக்கு அடியில் இருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தவாறு வெளியேறியதால் கைதிகள் உயிருக்கு பயந்து பீதியில் தப்பிவிட்டனர். டோங்கலா நகர சிறைக்கு தீ வைத்த கைதிகள், தங்களுடைய உறவினர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தப்பிவிட்டனர்.

மொத்தமாக, 1,200க்கும் மேற்பட்ட கைதிகளை காணவில்லை. அவர்களை ேதடும் பணி நடக்கிறது’ என்றார்.



ஒருபக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, சுனாமியால் காணாமல் போனவர்கள் தேடுதல் பணி, இறந்தவர்களின் சடலங்களை தேடி கண்டுபிடித்து அடக்கம் செய்யும் பணி, அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், சிறைகளில் இருந்து 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டதால் அவர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இன்றும் நிலநடுக்கம்:
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில், இன்று அதிகாலை 40 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5. 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பகுதியில், 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள இந்தோனேசியா, அடுத்தடுத்து நிலநடுக்க அறிவிப்பை எதிர்கொண்டு வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை