அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசு திட்டங்கள், சிம் கார்டு, பள்ளிகள் ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, ஒவ்வொரு குடிமகன்களின் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆதார் கார்டு வழங்கப்பட்டது. ஆதாருக்காக எடுக்கப்பட்ட தனி மனிதனின் தகவல்கள் பாதுகாப்பானதாக இல்லை என்றும், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து, ஆதார் கார்டு தகவல்கள் திருடப்படுவதில்லை. அதில் எந்த பிரச்னையும், பாதிப்பும் வராது என மத்திய அரசு தரப்பில் மக்களுக்கு அதிகாரப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களிலும் இணைக்க மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

அரசு திட்டங்களுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஆதாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 27 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி தொடங்கி மே வரை தொடர்ந்து நான்கு மாதங்களாக மொத்தம் 38 நாட்கள் விசாரித்தனர்.

அப்போது, ‘‘தனிமனித சுதந்திரம் என்பது முழுமையாக இருக்க கூடியது இல்லை. அதனால் தனிநபர் மனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டது தான் என்றும், அரசியல் சாசன சட்டம் 21ன் படி எந்த ஒரு தனி நபரும் சட்டப்படி உருவாக்கப்பட்ட எந்த ஒரு விசாரணைக்கும் உட்பட வேண்டும் என்பதால் தான் சிறை தண்டனை மற்றும் மரண தண்டனையை அரசு நடைமுறை படுத்தியுள்ளது.

அதனால் தனி மனிதனின் ஒவ்வொரு அங்கமும் அடிப்படை உரிமையே’’ என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தனி மனித விவரங்களை கேட்பதில் சில வரைமுறைகள் கண்டிப்பாக தேவை’’ எனக்கூறி வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் கடந்த மே 10ம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றம்சாட்டப்பட்ட ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்விலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை 40 பக்க தீர்ப்பை வழங்கியது. 5 நீதிபதிகள் சார்பில் 40 பக்க தீர்ப்பை நீதிபதி சிக்ரி வாசித்தார்.

அதில், இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயம் ஆதார். ஆதார் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதுதான்.

ஆதார் சிறப்பானது என்பதை விட அதன் தனித்துவம் முக்கியமானது.

ஆதாரில் தனி மனித சுதந்திரம் என்பது மட்டுமே சவாலானது.

போலி ஆதார் அட்டை தயாரிப்பது என்பது சாத்தியமில்லை. கல்வி அறிவால் கைநாட்டில் இருந்து கையெழுத்துக்கு மாறி உள்ளோம்.

ஏழை, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பது ஆதார் தான். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய ஆதார் உதவியாக உள்ளது.

ஆதாருக்காக மக்களின் குறைந்தப்பட்ச தகவல் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே, அரசு சேவைகள் பெற ஆதார் கட்டாயம்.

ஆதார் அட்டை கட்டமைப்பு என்பது தனித்தன்மை வாய்ந்ததாகும். அது, தனிமனிதனின் அங்கீகாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்று.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் ஒட்டுமொத்த மக்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தனி மனித வாழ்வாதாரத்துக்கு அரசு சலுகை பெற ஆதார் முக்கியம்.

ஆதார் எண்ணில் ஏதேனும் குளறுபடி இருப்பினும் சிஐடிஆருக்கு தெரிவிக்கலாம். ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றுக்கு அரசு சலுகைகள் பெற ஆதாரை பயன்படுத்தி கொள்ளலாம்.



ஆதார் அட்டையை பயன்படுத்துவதின் மூலம் பல்வேறு போலி அடையாள அட்டைகள் இருக்காது. ஆனால், மனுதாரர் தரப்பில் ஆதார் அட்டை தனி மனித உரிமையை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

அது கிடையாது. ஒட்டுமொத்தமாக கூற முடியாது.

ஏனெனில், மத்திய அரசின் இந்த ஆதார் திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்று கொண்டு உள்ளனர். இருப்பினும், இதன் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி டேட்டா பாதுகாக்க வேண்டும்.

ஆதார் அட்டை பாதுகாப்பது என்பது தேசிய பாதுகாப்பாக அனைவரும் கருத வேண்டும். ஒரு குழந்தை கொட்டம் செய்கிறது என்பதால் அதனை தூக்கி தண்ணீரில் எறிய முடியாது.

அதுபோல தான் ஆதார் திட்டமும். இருப்பினும், அதில் உள்ள சின்ன குறைகளை தீர்ப்பதற்காக அரசும் துறை சார்ந்த அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



இந்த திட்டத்தை பொறுத்தவரையில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஆதார் திட்டம் என்பது முழுமையாக தோல்வியடைந்ததாக நீதிமன்றம் கருதவில்லை. குறிப்பாக, பள்ளி, வங்கி, சிம் கார்டு ஆகியவற்றுக்கு ஆதார் கார்டு கட்டாயம் கிடையாது.

அதேபோல், தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு சலுகைக்காகவும் ஆதாரை கட்டாயப்படுத்தி கேட்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஏன் என்றால், இது அரசியல் அமர்வு சட்டத்துக்கு உகந்தது கிடையாது.

கல்வி நிறுவனங்கள் பொறுத்தவரையில் சிபிஎஸ்இ, நீட், யுஜிசி ஆகிய துறைக்கு ஆதார் கட்டாயம் கிடையாது. ஆதார் திட்டம் என்பது சரியானதுதான்.

ஆனால், அடிப்படை உரிமைகள் பறிக்கும் எதற்கும் ஆதாரை கட்டாயப்படுத்த கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பில், 5ல் 3 நீதிபதிகள் பெரும்பான்மையாக அரசு சேவைக்கு ஆதார் கட்டாயம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்
1.

போலியாக ஆதார் அட்டையை உருவாக்க முடியாது.
2. மற்ற ஆவணங்களில் இருந்து வேறுபட்டது.
3.

ஆதாரில் சில திருத்தங்களை செய்ய வேண்டும்.
4. ஆதார் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது.
5.

தனியார் நிறுவனங்களுக்கு விவரங்களை அளிக்கக்கூடாது.
6. விளிம்பு நிலை மக்களின் அடையாளமாக உள்ளது.
7.

பாதகங்களை விட சாதகங்கள் அதிகமாக உள்ளது.
8 ஆதாரை பாதுகாக்க வலுவான கட்டமைப்பு தேவை.
9. தகுதி உள்ளவர்கள் எளிதாக சேவையை பெற முடியும்.
10.

பள்ளிகளில் குழந்தைகளிடம் ஆதார் கேட்க கூடாது.
11. குறைந்தபட்ச தேவைகளுக்கு மட்டும் கேட்க வேண்டும்.
12.

சிம் கார்டு பெற ஆதார் தேவையில்லை.

.

மூலக்கதை