வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது: டிரம்ப் புகழாரம்

தினகரன்  தினகரன்
வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது: டிரம்ப் புகழாரம்

நியூயார்க்: லட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபை  நடைபெற்றது. சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சுதந்திரமான சமூகத்தை கொண்டது என்று தெரிவித்தார். ஐ.நா. பொது சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில் டிரம்ப் பேசுவது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்கிய சீனா மீது அமெரிக்கா சில தடைகளை அண்மையில் விதித்தது. இதேபோல்,  ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்கினால், இந்தியா மீதும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், கடந்த 24-ம் தேதி நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, டிரம்ப்  சந்தித்தபோது, பிரதமர் மோடியிடம் இருந்து அதிபர் டிரம்பிற்கு வாழ்த்துக்களை பெற்று வந்ததாக  சுஷ்மா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் இந்தியாவை மிகவும்  நேசிக்கிறேன். என்னுடைய அன்பை என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு தெரிவியுங்கள்” என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்தியா சுதந்திரமான சமூகத்தை கொண்டது என்று டிரம்ப் தற்போது புகழாரம் சூட்டியுள்ளார்.

மூலக்கதை