சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடனுக்கு 1 மணி நேரத்திற்குள் ஒப்புதல்: புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடனுக்கு 1 மணி நேரத்திற்குள் ஒப்புதல்: புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின்  வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளை இணைத்து www.psbloansin59minutes.com என்ற இணைய தளத்தை மத்திய  நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த இணையதளம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு உடனடியாக ஒரு மணி  நேரத்திற்குள் ஒப்புதல் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு வங்கிக் கடனுக்கு ஒப்புதல் பெற 20 முதல் 25 நாட்களாகும், இந்த கால விரயத்தை இந்த இணையவழி சேவை போக்கி விடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் 7 அல்லது 8 பணி நாட்களுக்குள் கடன் தொகை உரியவருக்கு கிடைத்துவிடும் என்றும் நிதியமைச்சகம் உறுதியளித்துள்ளது. மேலும் வங்கிகளின் உள்கட்டமைப்பு, சேவைகள், ஏடிஎம் வசதிகள், வங்கிக்  கிளைகள், வங்கிகளின் விதிமுறைகள் உள்பட பல்வேறு விவரங்களுக்கான ஜன் தன் தர்ஷக் என்ற இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, வாராக்கடன்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 36 ஆயிரத்து 551  கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நிர்ணயிக்கப்பட்ட 8 சதவீத பொருளதார வளர்ச்சி என்ற இலக்கு எட்டப்படும் என்றும் வங்கி கடன் மோசடி, கடன் ஏய்ப்பு செய்பவர்கள் மீது பொதுத்துறை வங்கிகள்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மூலக்கதை