தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலத்தில் நடந்த அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் வசிக்கின்ற தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள், கொடுமைகளைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கருணாநிதி தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த போதும், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் தான் இலங்கையில் நமது இனமக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இந்தியா, இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்த காரணத்தினாலே விடுதலைப்புலிகளை எளிதாக முறியடிக்க முடிந்தது என்று ராஜபக்சே பேட்டி கொடுத்தார். இதன்பின்னர் தான் தி.மு.க. நடத்திய நாடகம் வெளியானது.

தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் போர்க்குற்றம் செய்திருக்கின்றார்கள், அப்பாவிகளை கொன்று குவித்திருக்கின்றார்கள், இனமக்களை படுகொலை செய்திருக்கின்றார்கள். எனவே, இவர்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அண்மையிலே, ஸ்டாலின் இங்கே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்வதைப் போல ஒரு தோற்றம் அளிக்கின்ற ஒரு செய்தியைச் சொன்னார். ஏனென்று சொன்னால் ஒரு பொய்யை திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது மக்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அடிக்கடி இந்த பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கின்றார்களே. இதிலே ஏதாவது இருக்குமா? என்று சந்தேகம் வந்துவிடும். அதை நிவர்த்திப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது.

செயல்படமுடியாத தலைவருக்கு செயல் தலைவர் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்படி செயல்பட முடியாத ஒரு தலைவருக்கு தி.மு.க. தலைவர் என்று ஒரு பட்டம் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அவரது மகன் தான் தி.மு.க.வில் முக்கிய பொறுப்புக்கு வர முடிந்தது.

அதேபோன்று ஈரோட்டில் என்.கே.கே.பெரியசாமி, அவரது மகன் என்.கே.கே.ராஜா ஆகியோர் தான் ஆதிக்கம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தார். இப்போது அவரது மகனும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். இப்படியெல்லாம் இருந்தால் அந்த கட்சியை கம்பெனி என்று தான் சொல்ல முடியும். கட்சி என்றா சொல்ல முடியும்?.

அ.தி.மு.க.வில் கட்சிக்காக, கொள்கைக்காக, விசுவாசமாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும். இது ஜனநாயக கட்சி. இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் யாரும் மிராசுதாரர் அல்ல, தொழில் அதிபர் அல்ல, கோடீஸ்வரர் கிடையாது. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். உழைத்து வாழக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்கள்.

எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் இரும்பு மனம் உடையவர்கள், உழைக்கப் பிறந்தவர்கள். தி.மு.க.வினரைப் போன்று மற்றவர்கள் உழைப்பில் வாழப்பிறந்தவர்கள் அல்ல. அ.தி. மு.க.வை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. மு.க.ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும், முதல்-அமைச்சர் கனவில் இருக்கின்றார். அவர் கனவு தான் காண முடியும், எப்பொழுதுமே முதல்- அமைச்சர் ஆக முடியாது.

தி.மு.க.வினர் அவ்வப்போது கொள்கையை மாற்றிக்கொள்வார்கள். அது ஒரு கொள்கை இல்லாத கட்சி. அதிகாரம் எங்கே கிடைக்கிறதோ அங்கே தாவி விடுவார் கள். அவர்களுக்கு நாற்காலி மீது தான் ஆசை. மக்களைப் பற்றிய கவலையில்லை.

எங்களைப் பொறுத்தவரைக்கும் மக்கள் தான் முக்கியமானவர்கள். தமிழ்நாட்டு மக்கள் தான் எங்களுக்கு விலாசம் கொடுத்தார்கள். ‘நமக்கு வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை பாத்திரமாக இருக்க வேண்டும். இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற வேண்டும்’ என்று ஜெயலலிதா அடிக்கடி எங்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அ.தி.மு.க. அரசு தான் மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு. அ.தி.மு.க. பலத்தை தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டுவோம். அ.தி.மு.க. அரசில் எல்லாத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டு அகில இந்திய அளவிலே துறை வாரியாக விருதுகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம். சிறப்பான நிர்வாகம் இருந்தால் தானே தேசிய விருது பெற முடியும். இந்த விஷயம்கூட மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஒரு தவறான தகவலை, பொய்யான தகவலை எல்லா கூட்டத்திலும் அவர் கூறிக்கொண்டிருக்கிறார். பொறாமையால் அவர் இதுபோன்று பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் தான் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று சொன்னேன்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சியென்றால், அது தி.மு.க. ஆட்சி தான். எங்களைப் பார்த்து ஊழல் ஆட்சி என்று சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?. எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அ.தி.மு.க.வுக்கு மக்கள் பலம் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மூலக்கதை