போர்ச்சுக்கலில் 400 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
போர்ச்சுக்கலில் 400 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு

கஸ்காயிஸ்: போர்ச்சுக்கல் நாட்டில் 400 ஆண்டுகள் பழமையான கப்பல் லிஸ்பனின் புறநகரான கஸ்காயிஸ் கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அந்த கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.அந்த கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமண பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள், போர்ச்சுக்கீசியர்கள் பயன்படுத்தும் ஆடை அலங்கார கருவிகள், சீன செராமிக்ஸ் பொருட்கள், அடிமைகளை விலைக்கு வாங்க பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் போன்றவை இருந்தது.இவை கடந்த 3-ந்தேதி லிஸ்பனின் புறநகரான கஸ்காயிஸ் கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி.1575, 1625-க்கு இடையே போர்ச்சுக்கல் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே நறுமண பொருட்கள் வர்த்தகம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போதுதான் இந்த கப்பல் மூழ்கியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை