கண்டலேறு அணையில் இருந்து 1200 கன அடி தண்ணீர் திறப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கண்டலேறு அணையில் இருந்து 1200 கன அடி தண்ணீர் திறப்பு

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி ஆகும்.

இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி வீதம் ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீர் வழங்கப்பட வேண்டும்.

ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதி, முதல் தவணை காலம் தொடங்கியது. இந்த தவணை காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும்.

ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்த நிலையில், சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.

இதனால், அங்குள்ள அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து 22ம் தேதி மதியம் 1. 30 மணியளவில் 200 கன அடி நீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து 3 மணியளவில் 300 கன அடியாக நீர் திறப்பு அதிகரித்தது. இந்த நீர் தற்போது, 50 கி. மீட்டரை தாண்டி வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திரா நீர்வளத்துறைக்கு தமிழக பொதுப்பணித்துறை கோரிக்கை விடுத்தது.

இதை தொடர்ந்து நேற்று மாலை கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீர் 4 நாட்களில் வந்தடையும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, கிருஷ்ணா நீர் ஆந்திரா கால்வாய் ஓரப்பகுதிகளில் திருடப்படுவதை தடுக்க ரோந்து பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தவணைகாலத்தில் 3 டிஎம்சி வரை தமிழகத்திற்கு திறக்கப்படும் என்று ஆந்திரா அரசு உறுதியளித்துள்ளது’ என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை