சைதாப்பேட்டை-கிண்டி இடையே ரயில் மோதி 2 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சைதாப்பேட்டைகிண்டி இடையே ரயில் மோதி 2 பேர் பலி

சென்னை: சைதாப்பேட்டை - கிண்டி இடையே ரயில் பாதையை கடக்க முயன்றபோது, புறநகர் மின்சார ரயில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் ரயில் பாதையை கடந்து, பிற பகுதிகளுக்கு செல்கின்றனர்.

குறிப்பிட்ட இடத்துக்கு வேகமாக செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் இவ்வாறு செய்கின்றனர். சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் வேளச்சேரி ரயில் நிற்கும் நடைமேடை - தாம்பரம் செல்லும் ரயில் நிற்கும் நடைமேடைக்கு இடையே நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல், பெரும் எண்ணிக்கையில் ரயில் பாதையை கடந்து செல்கின்றனர்.

இவ்வாறு ரயில் பாதையை கடப்பவர்கள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று காலை, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி புறநகர் மின்சார ரயில் புறப்பட்டது. அந்த ரயில் சைதாப்பேட்டை-கிண்டி இடையே வந்தபோது ரயில் பாதையை கடந்து சென்ற இரண்டு பேர் மீது ரயில் மோதியது.

அதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கி இறந்தவர்களில் ஒருவர் தி. நகரை சேர்ந்த சந்திரசேகர்(33) என்பது தெரியவந்தது.

மற்றொரு நபரின் அடையாளம் தெரியவில்ைல.

அவர் யார், எதற்காக இவர்கள் ரயில்பாதையை கடந்து சென்றார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை