திருவள்ளூரில் 3 பேருக்கு டெங்கு நகராட்சியில் கலெக்டர் அதிரடி ஆய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூரில் 3 பேருக்கு டெங்கு நகராட்சியில் கலெக்டர் அதிரடி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் சிறுமி உட்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் அதிரடி ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலில் பலியான சம்பவம் நடந்துள்ளது.

இதற்கு, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், முறையாக குப்பைகள் அகற்றப்படாதது, கழிவுநீர் தேக்கம், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை முறையாக 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யாதது போன்றவைதான் காரணம். தற்போது திடீர் மழை, கடும் வெயில் என பருவநிலை மாற்றத்தின் காரணமாக, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளது.

இதனால், மாலை 6 மணி ஆனதும் கொசுக்கடியால் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்களது வீடுகளின் கதவுகள், ஜன்னல்களை மூடிவைத்து, வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த பேரத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (12), மணவாளநகர் பகுதியை சேர்ந்த சரண் (6), திருவள்ளூர் ஷர்மிலி (11) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில், சிறுமி ஷர்மிலி சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், மற்ற 2 சிறுவர்கள் திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர்.



இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று காலை 6 மணியளவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை ஆய்வு செய்தார். திருவள்ளூர் நேதாஜி சாலை, பஜார் வீதி, மோதிலால் தெரு, அய்யனார் அவென்யூ, பெரியகுப்பம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில், அகற்றப்பாடாமல் இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பெரியகுப்பத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை வழங்கும் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியில் ஏறி, முறையாக தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.

மேலும், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த 3 வீடுகளுக்கு தலா ரூ. 1000 வீதம் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தார்.

‘குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தால், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஊழியர்களை கலெக்டர் எச்சரித்தார். டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 ஒன்றியங்களில் வருவாய் துறை, சுகாதாரம், உள்ளாட்சி துறை அதிகாரிகளை கொண்ட 14 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், துணை வட்டாட்சியர் வெங்கடேசன், சுகாதார துறை, நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

.

மூலக்கதை