இமாச்சலில் நிலச்சரிவு திருச்சி, ஓசூரை சேர்ந்த 63 பேர் சிக்கி தவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இமாச்சலில் நிலச்சரிவு திருச்சி, ஓசூரை சேர்ந்த 63 பேர் சிக்கி தவிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் இமாச்சல பிரதேசத்திற்கு 7 நாட்கள் ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து 3 குழந்தைகள் உள்பட 22 பேர், கடந்த வியாழக்கிழமை பெங்களூருவில் இருந்து விமானம் மூலமாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சென்றனர். இந்நிலையில், மணாலியில் தொடர்ந்து மழை பெய்து மண் அரிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் சாலைகள் வெள்ளக்காடாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் சுற்றுலா சென்றவர்கள், கிடைக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு மணாலி பகுதியிலேயே தங்கி உள்ளனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், ‘‘இன்று அதிகாலை 4 மணி முதல் அங்கு மழை குறைந் துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெள்ளம் குறைய வாய்ப்புள்ளது. மணாலி பகுதியிலேயே தங்கியுள்ள அவர்கள், சாலை போக்குவரத்து சீரான பின்னர் குலு பகுதிக்கு வந்து விட்டால் விமானம் மூலம் வந்துவிடலாம்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.



திருச்சியை சேர்ந்த 41 பேர் சிக்கி தவிப்பு
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 23 மாணவர்கள், 8 மாணவிகள், 10 ஆசிரியர்கள் என 41 பேர் கடந்த 21ம் தேதி இமாச்சலபிரதேசம் குலுமணாலிக்கு கல்வி சுற்றுலா சென்றனர். வரும் 27ம் தேதி இவர்கள் ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

குலுமணாலியில் தொடர் மழையால் மண் அரிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஊர் திரும்ப முடியாமல் 41 பேரும் தவித்து வருகின்றனர். அனைவரும் அங்குள்ள விடுதியில் தற்போது தங்கி உள்ளனர்.

உணவு பிரச்னை எதுவும் இல்லை. 41 பேரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அங்கிருந்து உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி திருச்சி கலெக்டர் ராஜாமணி கூறுகையில், திருச்சியில் இருந்து குலுமணாலி சென்ற 41 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்.

அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

.

மூலக்கதை