மாத்தூர் பகுதிகளில் கொலுசு போல மாறிய கான்கிரீட் பில்லர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாத்தூர் பகுதிகளில் கொலுசு போல மாறிய கான்கிரீட் பில்லர்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மாதவரம், மாத்தூர் ஆகிய பகுதிகளில் மின்கம்பங்களை பாதுகாக்கும் வகையில் சிமென்ட் பில்லர் போடாமல், பெண்கள் காலில் அணியும் கொலுசு போல் வெறுமனே அமைக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 27-வது வார்டுக்கு உட்பட்ட இடையுமாநகர், மண்ணடி தெரு, ,திருவள்ளுவர் தெரு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மாத்தூர் மின்நிலையத்திலிருந்து ஓவர்ஹெட் முறையில் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.   இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வீசிய வர்தா புயல் மற்றும் கனமழையால் இங்குள்ள மின்கம்பங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் நீண்ட நாட்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.

இன்றுவரை அங்கு கான்கிரீட் உருக்குலைந்து, முறிந்து விழும் ஏராளமான மின்கம்பங்கள் அபாயநிலையில் உள்ளன.

அந்த மின்கம்பங்கள் முறிந்து விழுவதை தடுக்கும் வகையில், அக்கம்பங்களுக்கு அடியில் சிமென்ட் பில்லர் அதாவது, கோப்பின் எனும் ஒரு பாதுகாப்பு திட்டத்தை மின்வாரியம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, அந்த மின்கம்பங்களின் கீழே சுமார் ஒரு அடிக்கு பள்ளம் தோண்டி, பூமிக்கு மேல் 2 அடி என சுமார் 3 அடி உயரத்தில் சிமென்ட் கலவையால் பில்லர் அமைக்கப்படுகிறது.

இதன்மூலம் வேகமாக காற்று அடித்தாலும், அந்த மின்கம்பங்கள் கீழே சாய்ந்து விழுவதை தடுக்கும் என மின்வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாத்தூர் மின்வாரிய எல்லைக்கு உட்பட்ட இடையுமாநகர், அசிசி நகர் விரிவாக்கப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற சிமென்ட் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், மின்வாரிய திட்டத்தின்படி பூமிக்கு கீழே பள்ளம் ேதாண்டி பில்லர் அமைக்காமல், மேலோட்டமாக 2 அடி உயரத்தில், பெண்கள் அணியும் கொலுசு போல் வித்தியாச அளவுகளில் பில்லர்கள் அமைக்கப்படுகின்றன என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இவ்வாறு மேலோட்டமாக பில்லர் போடப்படுவதால், அந்த மின்கம்பங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் ஏற்படப் போவதில்லை.

இந்த பில்லர்கள் அனைத்தும் முறையான அளவுகளில் போடப்படுகிறதா என்பதை மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை