குற்ற வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குற்ற வழக்கில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: குற்ற பின்னணி கொண்ட எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
பாஜவை சேர்ந்த அஸ்வினி உபாயாத் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கிரிமினல் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் முழுவதும் நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அவர் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கிரிமினல் குற்ற வழக்கில் எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் ஆகிய அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால், அவர்கள் மீண்டும் எம். பி. , எம். எல். ஏ. , மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதி உள்ளது.

இது அரசு ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், அரசியல்வாதிகளுக்கு மாறுபட்ட விதிகளாக உள்ளது. இதை நீதிமன்றம் அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

எனவே, குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிப்பதோடு, கடும் தண்டனையும் விதிக்க வேண்டும்.

இல்லையேல், அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை பல்வேறு கட்டங்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம், எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும், என உத்தரவிட்டது.

இதற்கு மத்திய அரசும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உறுதியளித்தது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஆகும் செலவுகள் குறித்த தகவல்களை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கடந்த 2014ம் ஆண்டு முதல் 1581 குற்ற வழக்குகள் எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் மீது நிலுவையில் உள்ளன.

ஆனால், அதன்பிறகு புதிதாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரம் ஏதும் இல்லை. எனவே, அந்த விவரத்தையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும், என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் தொடர்பான கிரிமினல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் பணியானது முழுமையாக முடிந்து விட்டதா, மேலும், சம்மந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகள் சார்ந்த அனைத்து வழக்குகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா, எத்தனை வழக்குகள் இன்னும் மாற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

அது என்னென்ன அம்சங்கள் கொண்ட வழக்காக உள்ளது, என கேள்வி எழுப்பி இருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எம். பி. , எம். எல். ஏ. ,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், குற்ற பின்னணியில் உள்ள எம். பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது தண்டனை கொடுத்த பின் தேர்தலில் நிற்க தடை விதிக்கலாமா அல்லது அவர்கள் மீது முதல் குற்றப்பத்திரிகை பதிவு செய்த உடனே தடை விதிக்கலாமா என்பது குறித்து வழக்கில் நாளை (இன்று) தீர்ப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.



இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு இந்த வழக்கில் இன்று ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், எம். பி எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்க முடியாது.

அதற்கான அதிகாரம் எங்களுக்கு கிடையாது. இருப்பினும், ஊழல் என்பது நாட்டின் எதிர்ப்பு சக்தியையே குறைத்துவிடும்.

அது ஒரு பொருளாதாரம் குற்றமும் கூட அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பான ஒன்றாகும். இதுபோன்ற ஊழல் நடைபெறாமல் இருப்பதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டால், கட்சியின் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கலாம். இதுகுறித்து, இணையதளத்தில் (தேர்தல் ஆணையம் அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தில்) வெளியிடலாம்.

எனவே, ஊழல் குற்றப்பின்னணியில் உள்ள எம். பி மற்றும் எம்எல்ஏக்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது  என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.  

.

மூலக்கதை