ரபேல் விமான ஒப்பந்த சர்ச்சைக்கு இடையே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சுற்றுப்பயணம்

தினகரன்  தினகரன்
ரபேல் விமான ஒப்பந்த சர்ச்சைக்கு இடையே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சுற்றுப்பயணம்

டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரங்களுக்கு இடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அதில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசு தான் சிபாரிசு செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார். ஹோலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டசால்ட் நிறுவனமும், ரிலையன்சும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதில் எங்களது தலையீடு எதுவும் இல்லை என்றும் இரு நாடுகளும் மறுத்துள்ளது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (அக்டோபர்) பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் நிர்மலா சீதாராமன், 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசவும் உள்ளார். சந்திப்பின்போது மேற்கு ஆசியா மற்றும் இந்தோ- பசிபிக் கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீசில் தங்கியிருக்கும் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரனையும் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார். இதனையடுத்து அங்கிருந்து ஆசியான்நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இந்தியா வருகை தந்தார். அவரை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் பார்லியும் இந்தியா வருகை தந்தார். அப்போது பிரான்சில் பாதுகாப்பு அமைச்சர்கள்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எனவே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை