காஞ்சிபுரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம் கோஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேரடி அருகேயுள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸில் இந்தாண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வேலூர் மண்டல மேலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் காங்கேயவேலு வரவேற்றார். காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், “கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப புத்தம் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்வதால் 2017-18ம் ஆண்டு 320 கோடி அளவிற்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. விற்பனைக்காக புதிய வடிவமைப்புகளில் பட்டுப்புடைகள் மற்றும் பருத்தி சேலைகள் உள்ளன.

மென்பட்டு மற்றும் ஆர்கானிக் பட்டு சேலைகள் பெருவாரியான வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்று விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எழில் கொஞ்சும் வண்ண கலவைகளில் லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், ரெடிமேட் சர்ட்கள் மற்றும் எண்ணற்ற ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் ஆகியவை வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 விற்பனை நிலையங்கள் உள்ளன. கடந்தாண்டு தீபாவளிக்கு இங்கு ரூ. 8. 80 கோடி விற்பனையானது.

இந்தாண்டு ரூ. 11 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் கடந்தாண்டு 1. 5 கோடிக்கு விற்பனை செய்தது.

இந்தாண்டு ₹1. 80 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் விற்பனை, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி மற்றும் கனவு நனவு திட்டமும் நடைமுறையில் உள்ளது” என்றார்.
இதில், ரக மேலாளர் தணிகைவேலு, விற்பனை மேலாளர் நம்பிராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை