'டுவீட்'டுக்கு மேல் 'டுவீட்': பாக்., மாஜி 'ரிபீட்'

தினமலர்  தினமலர்
டுவீட்டுக்கு மேல் டுவீட்: பாக்., மாஜி ரிபீட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிற்கு இரண்டு நாக்குகள் இருக்கும் போலிருக்கிறது. ''2008 ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியதே இந்தியா தான்' என்று கூறி, அப்போதைய மத்திய காங்., அரசை தாக்கிக்கொண்டு இருந்தார். அதே ஆசாமி, ''2019ல் காங்., தலைவர் ராகுல் தான் இந்திய பிரதமர் ஆவார்'' என வெளிப்படையாக டுவிட்டர் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்தியாவை தாக்கும் வழக்கம்

பாக்., உள்துறை அமைச்சராக இருந்த ரஹ்மான் மாலிக்கிற்கு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவை வம்புக்கு இழுப்பது வழக்கம். மும்பை தாக்குதல் நடந்த போது, ‛‛இந்திய நெட்வொர்க் உதவி இல்லாமல் மும்பை தாக்குதல் நடக்க வாய்ப்பே இல்லை'' என்று கூறியவர்.''சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பின்போது (2007), பார்லிமென்ட் மீதான தாக்குதலின் போதும் (2001) இதையே கூறினார். அதாவது, இந்தியாவே இந்தியா மீது குண்டு வீசிக்கொள்ளுமாம். அப்படிப்பட்ட ‛அறிவாளி' அவர்.எட்டு ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்த அவர், மீண்டும் 'திருவாய்' மலர்ந்துள்ளார். இம்முறை, காங்கிரசிற்கு ஆதரவாக, தொடர்ந்து டுவீட் செய்தபடி இருக்கிறார்.
அவற்றில் அவர் கூறியிருந்ததாவது:''உங்கள் அடுத்த பிரதமர் ஆர்ஜி (ராகுல் காந்தியைத் தான் இப்படி குறிப்பிடுகிறார்). அவரை மதியுங்கள். உலகில் உங்கள் ரா/மோடி செய்த வேலைகளை ஆதாரத்துடன் டுவீட் செய்தேன். அவற்றை உலக மீடியாக்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டன. என்னை வசைபாடுவதை நிறுத்திவிட்டு, வளரப் பாருங்கள் இந்திய வசையாளர்களே'' என்று கூறியுள்ளார்.



இன்னொரு டுவீட்டில், ரபேல் விவகாரத்தில் மோடியை குறை கூறும் ராகுலை பாராட்டி உள்ளார். அதில்,''விமான ஊழலை வெளியே கொண்டு வந்தது உங்கள் ராகுல் தான். அவர் உங்கள் நாட்டு குடிமகன். உங்கள் ஆர்.எஸ்.எஸ்., மோடிக்கு எதிராக விமான ஊழலை வெளிக்கொண்டு வந்த காரணத்தால் அவரை பாக்.,கிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறீர்கள். இது வெட்கக் கேடு. அடுத்த தேர்தலில் அவர் மோடியை தோற்கடிப்பார். குறித்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

மோடிக்கு எதிராக வீடியோ: மோடிக்கு எதிராக ஒரு வீடியோவையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் மாலிக். ரபேல் விமான விவகாரத்தில் மோடியை விமர்சித்து ராகுல் பேட்டி அளித்த வீடியோ அது. அதன் பிறகு பதிவு செய்த டுவீட்டில்,''இந்திய சகோதர, சகோதரிகளே, பாகிஸ்தான் வெறுப்பை மோடி கைவிட்டால் தான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி ஏற்படும். பாகிஸ்தானுக்கு எதிரான அவரது செயல்களை நான் வெளிப்படுத்தி உள்ளேன். உங்கள் பிரதமர் என்ன செய்தார் என்று பாருங்கள்'' என்று குறிப்பிட்டுவிட்டு, ஒரு யூடியூப் லிங்கையும் கொடுத்துள்ளார்.



இன்னொரு பாக்., மந்திரி:

மாலிக் மட்டுமல்ல, வேறு சில பாக்., அமைச்சர்களும் ராகுலை ஆதரித்தும் மோடியை எதிர்த்தும் பேசி வருகின்றனர். அதில் முக்கியமானவர் இப்போதைய பாக்., தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பவத் ஹூசைன், ஏற்கனவே ராகுல் பதிவிட்ட டுவீட்டுகளை உதாரணமாகக் காட்டி,''ராகுலின் டுவீட்டுகளை பார்த்தாலே பாகிஸ்தானுக்கு எதிராக பா.ஜ., எப்படியெல்லாம் குற்றம்சாட்டுகிறது என்பது தெரியும்'' எனறு கூறியுள்ளார்.

இப்படி, அடுத்த பிரதமராக ராகுலுக்கு ஆதரவாகவும், மோடிக்கு எதிராகவும் பாக்., தலைவர்கள் வெளிப்படையாக பிரசாரம் செய்வது, இந்தியாவில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் மீது அவர்களுக்கு ஏன் அவ்வளவு திடீர் கரிசனம் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

மூலக்கதை