குற்றப்பின்னணி உள்ள நபர்களை கட்சிகளே நிராகரிக்க வேண்டும்: பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
குற்றப்பின்னணி உள்ள நபர்களை கட்சிகளே நிராகரிக்க வேண்டும்: பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: குற்ற பின்னணி கொண்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கிரிமினல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் முழுவதும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி.,  எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள அனைத்து  மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.  இதையடுத்து, 2014ம் ஆண்டு  முதல் 1581 குற்ற வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில்  உள்ளன. ஆனால், அதன்பிறகு புதிதாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரம் ஏதும் இல்லை. எனவே, அந்த  விவரத்தையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும், என மத்திய  அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த  2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எம்.பி.,  எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்படும் சிறப்பு  நீதிமன்றங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான  கிரிமினல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும்  பணியானது முழுமையாக முடிந்து விட்டதா, மேலும், சம்மந்தப்பட்ட சிறப்பு  நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகள் சார்ந்த அனைத்து வழக்குகளும் மாற்றி  அமைக்கப்பட்டுள்ளதா, எத்தனை வழக்குகள் இன்னும் மாற்றப்படாமல் நிலுவையில்  உள்ளது. அது என்னென்ன அம்சங்கள் கொண்ட வழக்காக உள்ளது, என கேள்வி எழுப்பி  இருந்தார்.  இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்விலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ததாலேயே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது, குற்றப்பின்னணி உள்ள நபர்களை அரசியல் கட்சிகளே நிராகரிக்க வேண்டும், இதற்கு நாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

மூலக்கதை