மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்: திருப்பதியில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

தினகரன்  தினகரன்
மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்: திருப்பதியில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று திருப்பதி சென்ற முதல்வர் பழனிசாமி, திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு நேற்று மாலை சென்றார். அங்கு முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு ஆந்திர காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்று கொண்டார்.இதனையடுத்து இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு ஆஞ்சனேய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, “ உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றார்.  அதன்பிறகு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை வருகிறார்.வெங்கையா நாயுடுவுடன் சந்திப்பு:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். வெங்கையா நாயுடுவும் இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கையா நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது, இருவரும் சாமி தரிசனத்திற்காக வந்தோம் என்று தெரிவித்தார்.

மூலக்கதை