ஐரோப்பிய அணி மீண்டும் சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஐரோப்பிய அணி மீண்டும் சாம்பியன்

சிகாகோ: உலக அணிக்கு எதிரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில், ஐரோப்பிய அணி 13-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதல்  முறையாக நடைபெற்ற இந்த தொடரின் கடைசி நாளில், ஒற்றையர் ஆட்டங்களில் ஐரோப்பிய அணி வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ரோஜர் பெடரர் (சுவிஸ்) இருவரும் வெற்றியை வசப்படுதினர். உலக அணியின்  கெவின் ஆண்டர்சனுடன் (தென் ஆப்ரிக்கா) மோதிய ஸ்வெரவ் 6-7 (3-7), 7-5, 10-7 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். மற்றொரு ஆட்டத்தில் பெடரர் 6-7 (5-7), 7-6 (10-8), 10-7 என்ற செட் கணக்கில் உலக அணியின்  ஜான் ஐஸ்னரை (அமெரிக்கா) வீழ்த்தினார்.முன்னதாக நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ஐரோப்பிய அணி சார்பில் களமிறங்கிய பெடரர் - ஸ்வெரவ் ஜோடி அமெரிக்க வீரர்கள் ஜான் ஐஸ்னர் - ஜாக் சாக் ஜோடியிடம் தோல்வி கண்டது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த  இந்த காட்சி டென்னிஸ் தொடரில் ஐரோப்பிய அணி 13-8 என்ற புள்ளிக் கணக்கில் உலக அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. கடந்த ஆண்டு பிரேகு நகரில் நடந்த முதலாவது தொடரிலும் அந்த அணி பட்டம்  வென்றிருந்தது. அடுத்த ஆண்டுக்கான லேவர் கோப்பை தொடர் ஜெனீவாவில் செப். 20-22 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை