இலங்கையுடன் மகளிர் டி20 தொடரை வென்றது இந்தியா

தினகரன்  தினகரன்
இலங்கையுடன் மகளிர் டி20 தொடரை வென்றது இந்தியா

கொழும்பு: இலங்கை மகளிர் அணியுடன் நடந்த 4வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. கொழும்பு கிரிக்கெட் கிளப் மைதானத்தில்  நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட இப்போட்டியில், இலங்கை அணி 17 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. ஷஷிகலா வர்தனே 40,  கேப்டன் ஜெயாங்கனி 31, யசோதா மெண்டிஸ் 19 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் அனுஜா பட்டீல் 3, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் மித்தாலி ராஜ் 11, ஸ்மிரிதி மந்தனா 5, டானியா பாட்டியா 5 ரன்னில் ஆட்டமிழக்க 4 ஓவரில் 41 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஜெமிமா  ரோட்ரிகியூஸ் - அனுஜா பட்டீல் இருவரும் 4வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்தியா 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஜெமிமா ரோட்ரிகியூஸ் 52 ரன்  (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), அனுஜா பட்டீல் 54 ரன்னுடன் (42 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும்  கைப்பற்றியது. இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி டி20 போட்டி கதுநாயகேவில் இன்று நடக்கிறது.

மூலக்கதை