423 போட்டியில் விளையாடி மெஸ்ஸி சாதனை

தினகரன்  தினகரன்
423 போட்டியில் விளையாடி மெஸ்ஸி சாதனை

பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், அதிக போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பார்சிலோனா அணி நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி  படைத்துள்ளார். நடப்பு சீசனில் பார்சிலோனா அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் ஜிரோனா அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பார்சிலோனா  சார்பில் கேப்டன் மெஸ்ஸி 19வது நிமிடத்திலும், ஜெரார்டு பிகே 63வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஜிரோனா அணி வீரர் ஸ்டுவானி 45வது மற்றும் 51வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். 35வது நிமிடத்தில்  பார்சிலோனா வீரர் லென்கிளெட் சிவப்பு அட்டைகாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டி, லா லிகா தொடரில் மெஸ்ஸி (அர்ஜென்டினா) விளையாடிய 423வது போட்டியாகும். இதன் மூலமாக லா லிகாவில் அதிக போட்டிகளில் களமிறங்கிய ஸ்பெயினை சேராத வீரர்கள் வரிசையில் அவர்  முதலிடத்துக்கு முன்னேறினார். சக பார்சிலோனா வீரர் டானி ஆல்வெஸ் (பிரேசில், 422 போட்டி) சாதனையை மெஸ்ஸி முறியடித்தார். இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலிலும் அவர் முதலிடம் வகிக்கிறார்.

மூலக்கதை