3 நாளாக நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்பு

தினகரன்  தினகரன்
3 நாளாக நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி மீட்பு

புதுடெல்லி: பாய்மரப் படகுப்போட்டியில் பங்கேற்றபோது, திடீர் புயலில் சிக்கி மாயமான இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டாமி மீட்கப்பட்டுள்ளார். முதுகெலும்பு முறிந்து 3 நாள் நடுக்கடலில் தத்தளித்த அவருக்கு  உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பாய்மரப் படகில் தனி ஆளாக 30,000 நாட்டிகல் மைல் தொலைவுக்கு உலகை சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ படகுப் போட்டி பிரான்சில் கடந்த ஜூலை  1ம் தேதி தொடங்கியது. இந்தியாவின் சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டாமி (39) பங்கேற்றார்.கீர்த்தி சக்ரா விருது வென்றவரான அபிலாஷ், 84 நாட்கள் சுமார் 10,500 நாட்டிகல் மைல் தூரம் பயணம் செய்து, போட்டியில்  3வது இடத்தை வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கடலில் புயல் உருவானது.  இதில் சிக்கிய அபிலாஷின் படகு சேதமடைந்து, அவர் மாயமானார். 48 மணி நேர தேடுதல் பணியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1900 நாட்டிகல் மைல் தொலைவில் அபிலாஷ் இருக்குமிடத்தை  இந்திய கடற்படை விமானம் பி8ஐ கண்டறிந்தது. அவர் வைத்திருந்த பாதுகாப்பு கருவி மூலம் விமானிக்கு பதில் அளித்தார். தனக்கு முதுகெலும்பு முறிந்திருப்பதாகவும் எழுந்து நிற்க முடியாத நிலையில் சேதமடைந்த படகில்  தவிப்பதாகவும் அபிலாஷ் தகவல் தெரிவித்தார். இதனால் கப்பல் மூலம் மட்டுமே அபிலாஷை மீட்க முடியும் என்பதால் கடற்படை விமானம் மொரீசியஸ் திரும்பியது. இதையடுத்து, அபிலாஷை மீட்டு வர இந்திய போர்  கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று நடந்த மீட்பு பணியில், கடற்படை விமானத்தின் வழிகாட்டுதலில், பிரான்சின் ஓசிரிஸ் கப்பல் அபிலாஷ் இருக்குமிடத்தை நெருங்கியது. ஓசிரிசிலிருந்து சிறிய கப்பல் மூலம் தண்ணீர், உணவு மற்றும் முதலுதவி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.அதில் சென்ற வீரர்கள், அபிலாஷுக்கு உணவு வழங்கி முதலுதவி சிகிச்சை அளித்தனர். 3 நாட்களாக அவர்  சரியான உணவின்றி முதுகெலும்பு முறிந்த நிலையில் நடுக்கடலில் தவித்துள்ளார். தற்போது மீட்கப்பட்டுள்ள அவர் சுயநினைவுடன் இருப்பதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே.ஷர்மா கூறி உள்ளார்.  அவர் கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய போர்கப்பல் உடனடியாக அங்கு விரைகிறது. ஓசிரிசிலிருந்து அபிலாஷ் ஆஸ்திரேலிய கப்பலுக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து பெர்த் அல்லது சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து  வரப்படுவார்’’ என தெரிவித்தார்.    மொரீசியசில் சிகிச்சைபாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் டாமி மீட்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி உள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மீட்கப்பட்ட அபிலாஷ் சுயநினைவுடன் உள்ளார். இன்று (நேற்று) மாலை அவர் கப்பல் மூலம்  அருகில் உள்ள தீவுக்கு அழைத்து செல்லப்படுவார். அங்கிருந்து ஐஎன்ஸ் சாத்புரா கப்பல் மூலம் அவர் மொரீசியஸ் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்’’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை