ஈரான் தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

தினமலர்  தினமலர்
ஈரான் தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

வாஷிங்டன் : ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என துாதர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் குசேஸ்தான் மாகாணத்தில் உள்ள ஆவாஸ் நகரில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலை அரபு நாடுகளுடன் துணையுடன் அமெரிக்கா நடத்தியதாக ஈரான் அதிபர் ரஹானி குற்றம் சாட்டியிருந்தார். இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் துாதர் நிக்கி ஹாலே கூறியது: ஈரான் அதிபர் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனது நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி ஒரு சாராரை ஒதுக்கி வருகிறார். அவர் தனது நிலையிலிருந்து விலகி நின்று இத்தகைய தாக்குதல்களுக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதை விடுத்து பிறநாடுகள் மீது குற்றம்சாட்டக்கூடாது, என்றார்.

அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறிய பிரச்னையால் ஈரான்- அமெரிக்கா இடையே மோதல்கள் அதிகரித்து வருகிறது. இரு தரப்பிலும் வார்த்தை யுத்தமும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை