குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?

தினமலர்  தினமலர்
குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?

புதுடில்லி : குஜராத் மாநிலத்தில், 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த, தொழிலதிபர் நிதின் சந்தேசரா, நைஜீரியாவில் பதுங்கி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், நிதின் சந்தேசரா; தொழிலதிபர். இவர், வதோதரா மாவட்டத்தில், 'ஸ்டெர்லிங் பயோ டெக்' என்ற பெயரில், மருந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், நிறுவன மேம்பாட்டுக்காக, ஆந்திர வங்கியிடம் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால், அதை திரும்பச் செலுத்தாமல் தலைமறைவானார்.

இந்த மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையினர் வழக்கு பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர், அனுப் கார்க், நிறுவனத்தின் இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். மேலும், ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்திற்கு சொந்தமான, 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, ஜூனில், அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். தலைமறைவாக இருந்த, நிதின் சந்தேசராவுக்கு, கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு, சி.பி.ஐ., அதிகாரிகளும் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், நிதின் சந்தேசரா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நிதின் சந்தேசரா, தற்போது துபாயில் இல்லை என்றும், அவன், தன் குடும்பத்தினருடன், தெற்கு ஆப்ரிக்க நாடான, நைஜீரியாவில் பதுங்கி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

துபாயில் கைது செய்யப்படுவதற்கு முன், அவர், நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என, கூறப்படுகிறது. ஆப்ரிக்க நாடான, நைஜீரியாவுடன், கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லாததால், அங்கிருந்து, நிதின் சந்தேசராவை, இந்தியாவுக்கு நாடு கடத்துவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை