கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கம்!

தினகரன்  தினகரன்
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கம்!

பனாஜி : எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் மகாராஷ்டிரா வாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து வந்த கட்சிகள் அதிருப்தி அடைந்து காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாநில கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து பாஜக தலைமை கோவா விரைந்து வந்து கூட்டணி கட்சியினரை சமாதானப்படுத்தியது. மேலும் அமைச்சர்கள் சிலர் மாற்றப்படலாம், ஆனால் முதல்வர் பதவியில் பரிக்கரே தொடர்ந்து நீடிப்பார் என பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில், உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவைச் சேர்ந்த பிரான்ஸிஸ் டிசௌஸா, பாண்டுரங் மட்கைகர் ஆகியோரை கோவா அமைச்சரவையில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்து அறிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த டிசௌஸா, உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் மட்கைகர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கி இவர்களுக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த நிலேஷ் கப்ரால், மிலிந்த் நாயக் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை