ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளின் அமைப்பு தினத்தில் எம்எல்ஏ, மாஜி எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற பின்னணி என்ன?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளின் அமைப்பு தினத்தில் எம்எல்ஏ, மாஜி எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற பின்னணி என்ன?

விசாகப்பட்டினம்: ஆந்திராவில், ஆளுங்கட்சி எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு சட்டசபை தொகுதி, தும்மிரிகூடா மண்டலம், லிவிடிபுட் கிராமத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். நேற்று, லிவிடிபுட் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சி  எம்எல்ஏ சர்வேஸ்வரர் ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவோரி சோமா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர்.

பின்னர், காரில் அரக்கிற்கு திரும்பி வந்து  கொண்டிருந்த போது, அப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள், எம்எல்ஏ சர்வேஸ்வர் ராவ், சிவேரி சோமாவை  துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். தகவலறிந்த விசாகப்பட்டினம் எஸ்பி ரகுல்தேவ் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, எம்எல்ஏ ஆதரவாளர்கள் சிலர் போலீசாரை கண்டித்து, அரக்கு மற்றும் தும்மிரிகூடா காவல் நிலையங்களுக்கு தீவைத்தனர்.

இதனால், இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தற்போது அமெரிக்காவில் உள்ளதால், அவர் போலீஸ் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற அமைப்பு, இந்திய மத்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் சிந்தாந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு ஆந்திர - ஒடிசா மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுடன் ஊடுருவி பல சதிசெயல்களை செய்து வந்தது.

அப்போதைய முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி பலகட்ட பேச்சுவார்த்ைத நடத்தியும்,

அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து, கடந்த 2006ம் ஆண்டு ஆந்திரா மாவோயிஸ்ட் எதிர்ப்பு படை ஏற்படுத்தப்பட்டு, தெலங்கானா மற்றும் மத்திய ஆந்திரா பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல சதி செயல்கள் முறியடிக்கப்பட்டன.

செப்டம்பர் 21ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் அமைப்பு தினமாக, ஒரு வாரத்துக்கு மாவோயிஸ்ட்டுகள் கொண்டாடி வருவர். இந்தாண்டு, 14ம் ஆண்டு அமைப்பு தினமாக, ஆந்திரா - ஒடிசா மண்டல பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட்டுகள் வரும் 27ம் தேதி வரை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளை பொறுத்தவரை, மக்கள் பிரதிநிதிகள் எவரையாவது சுட்டுக் கொல்வது அல்லது போலீஸ் ஸ்டேசன், அதிகாரிகளை கொல்வதே திட்டமாக இருந்தது.



முன்னதாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன், எம்எல்ஏ சர்வேஸ்வரரிடம் உளவுத்துறை தகவல்படி எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி இருந்தோம். இவர்கள், மலைப்பகுதி கிராமத்திற்கு செல்வது தொடர்பாக, எவ்வித முன்னறிப்பு தகவலும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு தெரிவிக்கவில்லை, அவர், தன்னுடைய ஆதரவாளர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கிராமசபையில் பங்கேற்றுள்ளார்.

இவர்கள் கிராமத்துக்கு வந்து ெசல்லும் தகவல், முன்கூட்டியே மாவோயிஸ்ட்டுகளுக்கு தெரிந்ததால், அவர்கள் திட்டமிட்டு படுகொலையை செய்துள்ளனர். எம்எல்ஏ சர்வேஸ்வரர், இப்பகுதியில் பிரச்னைக்குரிய நபராக தான் பார்க்கப்படுகிறார்.

கடந்த 2014ம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் தெலுங்கு ேதசம் கட்சியில் இணைந்தார்.

இவர், மாவோயிஸ்ட் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்.

கடந்த ஜூலையில் மலைவாழ்மக்கள் தங்கள் பகுதியில் கனிமம் வெட்டுவற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கனிமம் எடுப்பதற்கான அனுமதி, சர்வேஸ்வரரின் உறவினர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டதால், மலைவாழ் மக்களின் எதிர்ப்பை சந்தித்து வந்தார்.

கிராமசபை மூலம் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான அனுமதி கிடைக்காததால், அப்பகுதி கிராமமக்களை அடிக்கடி சந்தித்து சமாதானம் மற்றும் அவர்களை தாஜா செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார் கைப்பற்றிய ஆவணங்களில், மாவோயிஸ்ட் தலைவன் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதம் மற்றும் குறிப்புகளில் மக்கள் பிரதிநிதிகளை கொல்வதற்கான திட்ட சதி குறிப்புகளும் இருந்தன. ஐதராபாத்தில் செயல்படும் மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்பின் உத்தரவின் கீழ், வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட் ராமகிருஷ்ணன் தலைமையில் இயங்கும் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் அரங்கேற்றி உள்ளனர்.

வரும் சில நாட்களில், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘இசட் ப்ளஸ்’ முதல்வர்: தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவை, கடந்த 2003ம் ஆண்டு திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு வைத்து கொல்ல மாவோயிஸ்ட்கள் முயன்றனர்.

இதில், அவர் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த 2017ம் ஆண்டு ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் இரு மாநில போலீசாரும் கூட்டாக இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவோயிஸ்ட்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததில், 31 மாவோயிஸ்ட்கள், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் எண்ணத்தோடு மாவோயிஸ்ட்கள் கும்பல் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, டெல்லியில் வைத்து கொல்ல 6 முறை வேவு பார்த்ததாக மத்திய உளவுத் துறை எச்சரித்தது.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, மாவோயிஸ்டுகளால் எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால், அவருக்கு  ‘இசட் ப்ளஸ்’ எனப்படும் உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை