வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாசுக்கு ஒரு வாரம் காவல்: அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீஸ் மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாசுக்கு ஒரு வாரம் காவல்: அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீஸ் மனு

சென்னை: தமிழக முதல்வர், காவல்துறை உயர் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கருணாசை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி ேகட்டு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலையில் மனு தாக்கல் செய்துள்ளனர். முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடனை  சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி. நகர் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் தொணியில் அவதூறாக பேசினார்.

கருணாஸ் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து, கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் கருணாஸ் மற்றம் அவரது அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் செல்வநாயகம் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருணாஸை போலீசார் கைது செய்தனர்.

அவருடன் முக்குலத்தோர் புலிப்படை மாநிலை அமைப்பு செயலளாளர் செல்வநாயகம் (48) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

 பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும், எழும்பூர் நீதிபதி குடியிருப்பில் உள்ள எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற 13வது மாஜிஸ்திரேட் கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்ன, நீதிமன்ற உத்தரவின்பேரில், இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருணாஸ் சிறையில் அடைக்கப்பட்ட செய்தியை கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் புழல் சிறை முன்பு குவிந்தனர். இதையடுத்து, கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கும், செல்வநாயகம் கடலூர் மத்திய சிறைக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த ஏப்ரல் மாதம் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது என்று முக்குலத்தோர் புலிப்படை மற்றும் 16 அமைப்புகள்  சார்பில் போராட்டம் நடைபெற்றது.



அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். இதில் 5க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர்.

அதைதொடர்ந்து திருவல்லிக்கேணி போலீசார் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் பலர் மீது வழக்கு பதிவு செய்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கருணாஸ் மீது ஐபிஎல் போராட்டத்தின் போது பதியப்பட்ட 2 வழக்குகளிலும் கைது செய்ய போலீசார் முடிவு  செய்துள்ளனர்.

அதற்கான பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர். தற்போது, நடிகர் கருணாஸ் வேலூர் சிறையில் உள்ளதால் இன்று அல்லது நாளை இந்த 2 வழக்குகளிலும் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கருணாஸை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு, எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் முன்பு இன்று காலையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை