மீண்டும் கேரளாவை மிரட்டுது மழை மஞ்சள் நிற ‘அலர்ட்’ அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீண்டும் கேரளாவை மிரட்டுது மழை மஞ்சள் நிற ‘அலர்ட்’ அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் கன மழை குறித்த மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை துறை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  360க்கும் மேற்பட்ட மக்கள் கேரள மாநிலத்தில் உயிரிழந்தனர்.

மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்ததால், மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இருந்தும், வெள்ளம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் கட்டுமான பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. இந்த சூழ்நிலையில், கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



குறிப்பாக, பத்தினம் திட்டம், இடுக்கி, வயநாடு, திரிசூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் (நாளையும், நாளை மறுநாளும்) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கன மழை குறித்து, ‘யெல்லோ அலர்ட்’ எனப்படும் மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, மேற்கண்ட இரண்டு நாட்களில் 64. 4 மி. மீட்டர் முதல் 124. 4 மி. மீட்டர் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ெசல்லுமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மாநில பேரிடர் மேலாண்மை துறை விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை